கமலின் மய்யத்துடன் கூட்டணி வைக்கும் இந்திய ஜனநாயக கட்சி? உண்மை நிலவரம் என்ன?

 

கமலின் மய்யத்துடன் கூட்டணி வைக்கும் இந்திய ஜனநாயக கட்சி? உண்மை நிலவரம் என்ன?

மக்களவை தேர்தலில் கமலின் மய்யத்துடன் இந்திய ஜனநாயக கட்சி இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: மக்களவை தேர்தலில் கமலின் மய்யத்துடன் இந்திய ஜனநாயக கட்சி இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கமல் ஹாசன்  அறிவித்தார். அதன்படி சில கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைத்து போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து  பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக  கமல்ஹாசனை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரிவேந்தர் நேற்று இரவு 7.30 மணியளவில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்துள்ளது. இந்த சந்திப்பில் மக்களவைத் தேர்தலில் 2 கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பேட்டியளித்துள்ள  பாரிவேந்தர், ‘நானும் கமல் ஹாசனும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றாக செயல்படலாம்  என்று முடிவெடுத்திருந்தோம். கமல் ஹாசனிடம் எனது கட்சி கொள்கைகளைத் தெளிவாகக் கூறி விட்டேன். அவரும் நம் இருவருடையதும், ஒரே கட்சி, ஒரே கொள்கை, ஒரே லட்சியம் என்று கூறினார். எங்களது கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.