கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிப்பு… சந்திரயான் 2 நிலை என்ன?…. சோகத்தில் ஆழ்ந்த தேசம்

 

கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிப்பு… சந்திரயான் 2 நிலை என்ன?…. சோகத்தில் ஆழ்ந்த தேசம்

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்த கடைசி நேரத்தில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தேசமே கடும் சோகத்தில் ஆழ்ந்தது

நிலவின் தென்துருவத்தை ஆய்வு நோக்கில் சந்திரயான் 2வை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 நிலவை அடைய 48 நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ரூ.940 கோடி செலவில் இந்த சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ உருவாக்கி இருந்தது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்

கடந்த ஜூலை 22ம் தேதியன்று சந்திரயான் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டது. முதலில் சந்திரயான் 2 பூமியை சுற்றி வந்தது. விண்ணில் ஏவப்பட்ட 23 நாள் கழித்து பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு நிலவை நோக்கி சந்திரயான் 2 அனுப்பப்பட்டது. திட்டமிட்டப்படி சந்திரயான் 2 நிலவின் வட்டப்பாதையை அடைந்தது. நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் சந்திரயானில் இருந்து ஆர்பிட்டர் எனப்படும் சாட்டிலைட்  கழற்றி விடப்பட்டது. கழற்றிவிடப்பட்ட ஆர்பிட்டர் நிலவை ஒரு வருடத்துக்கு சுற்றி வந்து தகவல்களை அனுப்பும்.

சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்துவுடன் நிலவின் ஈர்ப்பு விசையால் நிலவில் வேகமாக தரையிறங்க தொடங்கியது. நிலவை அடைய 2.1 கி.மீ. தூரம் இருக்கும் வரை லேண்டர் சரியாக இறங்கியது. ஆனால் அதன்பின் பிரச்சனை ஏற்பட்டது. நிலவுக்கு 2 கி.மீட்டருக்கு முன்னதாக வேகம் குறைக்கப்பட்டு லேண்டர் நிலவில் மெதுவாக இறக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் லேண்டருடனான தொடர்பு துண்டானது. இதனால் சந்திரயான் 2க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவருடன் பிரதமர் மோடி

இஸ்ரோ இயக்குனர் சிவன் அளித்த பேட்டியில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கி.மீ வரை சரியாக இறங்கியது. அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. டேட்டாக்களை ஆய்வு செய்து வருகிறோம் என கூறினார்.