கடுமையான அபராதத்தால் அலறும் வாகன ஓட்டிகள்….. சந்தோஷத்தில் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள்…

 

கடுமையான அபராதத்தால் அலறும் வாகன ஓட்டிகள்….. சந்தோஷத்தில் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள்…

போக்குவரத்து விதிமுறைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால், வாகன இன்ஸ்யூரன்ஸ் விற்பனை களைகட்டியுள்ளது இதனால் காப்பீடு நிறுவனங்கள் சந்தோஷம் அடைந்துள்ளன.

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய வாகன சட்டத்தின்படி, பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக, இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் சாலையில் வாகனம் சென்றால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், 3 மாதம் வரை சிறைத்தண்டனையும் விதிக்கமுடியும். மீண்டும் அதே விதிமுறை மீறலில் ஈடுபட்டால்  அபராதமாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும் மேலும் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

போக்குவரத்து விதிமீறல்

கடுமையான அபராத தொகைக்கு பயந்தே வாகனம் வைத்திருப்பவர்கள் தங்களது காலாவதியான இன்ஸ்யூரன்ஸை புதுப்பிக்க தொடங்கி விட்டனர். இதனால் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய விதிமுறைகளால் மக்கள் தாங்களாகவே முன்வந்து வாகன இன்ஸ்யூரன்ஸ் பாலிசியை புதுப்பித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனங்களுக்கான இன்ஸ்யூரன்ஸ் பாலிசி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது என கூறினார்.

வாகன சோதனையில் போலீஸ்

பொதுவாக மோட்டார் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுப்பதை பலரும் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களில் பலர் விரும்புவதில்லை. நாம என்ன விபத்தை ஏற்படுத்த போகிறமா? எதற்கு தேவையில்லாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து காசை செலவு செய்ய வேண்டும் என்ற நினைப்புதான் காரணம். ஆனால் இனி அதுமாதிரி இருக்க முடியாது. இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதனால இன்ஸ்யூரன்ஸ் எடுப்பதுதான் நல்ல முடிவு.