கடனை அடைக்க ஜியோ பங்குகளை விற்று தள்ளும் முகேஷ் அம்பானி… ரூ.6,598 கோடிக்கு 1.34 சதவீத பங்குகளை வாங்கிய ஜெனரல் அட்லாண்டிக்

 

கடனை அடைக்க ஜியோ பங்குகளை விற்று தள்ளும் முகேஷ் அம்பானி… ரூ.6,598 கோடிக்கு 1.34 சதவீத பங்குகளை வாங்கிய ஜெனரல் அட்லாண்டிக்

ஜியோவில் 1.34 சதவீத பங்குகளை ரூ.6,598 கோடிக்கு ஜெனரல் அட்லாண்டிக் வாங்கி உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

நாட்டின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோலிய வர்த்தகம் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறைகளில் கொடி கட்டி பறக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடன் உள்ளது. 2021 மார்ச் மாதத்துக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனம் என்ற நிலையை எட்டும் என 2019 ஆகஸ்டில் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார்.

ஜெனரல் அட்லாண்டிக்

மேலும் அதற்கான நடவடிக்கையிலும் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியது. முதலில் தனது எண்ணெய் வர்த்தகத்தில் கணிசமான பங்குகளை சவுதியின் அரோம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்து பணத்தை திரட்டும் நடவடிக்கையில் இறங்கியது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் முடிவான நிலையில் ஒரு சில காரணங்களால் அது தாமதமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்துக்கு ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு விற்பனை செய்தார். 

ஜியோ

இதனையடுத்து அண்மையில் சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் 1.15 சதவீத பங்குகளை ரூ.5,665.75 கோடி வாங்கியது. இந்த ஒப்பந்தம் நடந்து முடிந்த ஒரு சில தினங்களில் தனியார் பங்கு முதலீ்ட்டு நிறுவனமான விஸ்தாவுக்கு ஜியோவின் 2.3 சதவீத பங்குகளை ரூ.11,367 கோடிக்கு விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஜியோவின் 1.34 சதவீத பங்குகளை ரூ.6,598.38 கோடிக்கு ஜெனரல் அட்லாண்டிக் வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் ஆசியாவில் மேற்கொண்ட மிகப்பெரிய முதலீடு இதுவாகும். ஒட்டு மொத்தத்தில் கடந்த 4 வார காலத்துக்குள் பேஸ்புக், விஸ்தா, சில்வர் லேக் மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களுக்கு ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகள் விற்பனை வாயிலாக மொத்தம் ரூ.67,194.75 கோடியை ரிலையன்ஸ் திரட்டியுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் சுமையை கணிசமான அளவில் குறைக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார்.