கஞ்சா பொட்டலத்துடன் போலீசில் சிக்கிய பாமக மாவட்டத் தலைவர்: சிறையில் அடைப்பு!

 

கஞ்சா பொட்டலத்துடன் போலீசில் சிக்கிய பாமக மாவட்டத் தலைவர்: சிறையில் அடைப்பு!

சென்னை: சென்னையில் கஞ்சா விற்றதாக பாமக மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை திருவல்லிக்கேணி அருகே உள்ள பல்லவன் சாலை எஸ்.எம். நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில்  போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சரவணன்(வயது 34) என்பவரை ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில், அந்த நபர் பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சரவணன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும், சரவணனின் தாயார் காஞ்சனா மீது சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கும், மாமியார் வேலாயி மீது கஞ்சா விற்பனை வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் அக்கட்சியின் மாவட்டத் தலைவரே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.