கஜா புயல்; மத்திய குழு 3-வது நாளாக ஆய்வு

 

கஜா புயல்; மத்திய குழு 3-வது நாளாக ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு நடத்தியது.

நாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு நடத்தியது.

கஜா புயல் கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். தன்னார்வலர்களும், அரசும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசு புயல் நிவாரண நிதியாக ரூ 15,000 கோடி ஒதுக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால் முதற்கட்டமாக ரூ 200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதனையடுத்து புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு நேற்று முன்தினம்புதுக்கோட்டையில் இருந்து தனது ஆய்வை தொடங்கியது. அப்போது பொது மக்கள் மத்திய குழுவினரிடம் கதறி அழுதனர். தொடர்ந்து மத்திய குழுவினர் நேற்று பிற்பகல் தஞ்சாவூர் மற்றும் திருவாரூருக்கு சென்று அங்கும் ஆய்வை மேற்கொண்டு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பேசி ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், 3-வது நாளான இன்று மத்திய குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வேதாரண்யம், விழுந்தமாவடி, வேட்டைக்காரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் இன்று பிற்பகல் காரைக்கால் சென்று ஆய்வு செய்ய இருக்கின்றனர். இன்றுடன் ஆய்வை முடிக்கும் மத்திய குழு முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்துவிட்டு சேத மதிப்பை மத்திய அரசிடம் அளிக்க இருக்கிறது.