கஜா புயல்; மத்திய அரசிடம் கடன் வாங்கித் தருவதாக மோசடி

 

கஜா புயல்; மத்திய அரசிடம் கடன் வாங்கித் தருவதாக மோசடி

கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் மத்திய அரசின் கடன் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நாகப்பட்டினம்: கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் மத்திய அரசின் கடன் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையான சேதத்துக்கு உள்ளாகிச் சென்றுள்ளது. புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன.

மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை இன்றளவும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் வனிதா என்ற பெண், கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று மத்திய அரசு ரூ.50,000 கடன் வழங்குவதாகவும் அதில் ரூ.25,000 மானியம் என்றும் மீதமுள்ள ரூ.25,000 த்தை மாதமாதம் ரூ.500 வீதம் செலுத்தினால் போதும் என கூறி, இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.150 உடன், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தன்னுடைய அலுவலகத்துக்கு வர சொல்லி பேசியுள்ளார்.

இதனை நம்பிய ஏராளமான பெண்கள் அவரது அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணான தகவலகளை அங்கிருந்தோர் அளித்துள்ளனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் வனிதா உள்ளிட்ட நான்கு பேரை காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், வனிதா மற்றும் ஒருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள வனிதா, கடன் வாங்கித் தருவதாகக் கூறியது உண்மை என்றும் ஆனால் தாம் யாரிடமும் விண்ணப்பக்கட்டனம் வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.