கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்

சென்னை: கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன.

தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடியும், தற்காலிகமாக ரூ.1500 கோடியும் ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, கஜா புயல் பாதிப்பு பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததாக தகவல்கள் வெளியாகின. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகையை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை அருகே திருமங்கலத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பேரிடர் நிவாரணத்திற்கு ஆண்டுதோறும் வழங்கும் மத்திய அரசின் பங்களிப்பு நிதி மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணத்திற்கு என்று தமிழகத்திற்குத் தற்போது வரை மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. மத்தியஅரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை என்றாலும் தமிழக அரசு ரூ.1400 கோடிக்கு நிவாரண நிதி வழங்கியது என்றார்.