ஒரு பைசா கூட செலவு செய்யாதீங்க! பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு உத்தரவு!

 

ஒரு பைசா கூட  செலவு செய்யாதீங்க! பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு உத்தரவு!

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம், அனைத்து டெண்டர் மற்றும் பர்சேஸ் ஆர்டர்களையும் நிறுத்தி வைக்கும்படி தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஓகோவென்னு இருந்த அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. தினசரி செலவுகளை சமாளிக்க கூட முடியாத நிலையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிறுவனம் கிட்டத்தட்ட இயங்க முடியாத நிலைக்கு வந்து விட்டது அதனால் உடனடியாக நிதி உதவி அளிக்கும்படி மத்திய அரசிடம் பி.எஸ்.என்.எல். கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு இன்னும் மத்திய அரசு எந்தவித பதிலும் கூறவில்லை.

தொலைத்தொடர்பு துறை

இன்னும் 5 நாட்கள் கடந்தால் தனது ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் சம்பளத்தை கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் கையை பிசைந்து கொண்டு இருப்பதாக தகவல். இந்த நிலையில் தொலைத்தொடர்பு துறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது அனைத்து டெண்டர்கள் மற்றும் பர்சேஸ் ஆர்டர்களை நிறுத்தி வைக்கும்படி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலியுறுத்தியது.

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதிப்பிரிவு கடந்த 2ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அனைத்து டெண்டர் மற்றும் பர்சேஷ் ஆர்டர்களையும் நிறுத்தி வைக்கவும். மூலதன செலவுகளுக்காக புதிய டெண்டர் விடுவதாக இருந்தால் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என கூறியது. இந்த உத்தரவு கடந்த 12ம் தேதி நிறுவனத்தின் அனைத்து வட்ட தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பி.எஸ்.என்.எல். சிம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளதை தற்போதைய நிலவரங்கள் தெள்ள தெளிவாக வெளிப்படுத்துகின்றன.