ஒரு உண்மை சொல்லட்டுமா சார்….. போட்டி போட்டு வாங்கிய யெஸ் பேங்க் பங்கு…… 18 மாதத்தில் முதலீட்டாளர்களை ஏழையாக்கிய கதை…..

 

ஒரு உண்மை சொல்லட்டுமா சார்….. போட்டி போட்டு வாங்கிய யெஸ் பேங்க் பங்கு…… 18 மாதத்தில் முதலீட்டாளர்களை ஏழையாக்கிய கதை…..

2018 ஆகஸ்டில் யெஸ் பேங்க் பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் தற்சமயம் அந்த பங்கின் விலை தரை தட்டி விட்டது. இதனால் அந்த பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பலத்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று யெஸ் வங்கி. கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் டாப் 5 தனியார் வங்கிகளில் ஒன்று என்ற பெருமையுடன் யெஸ் பேங்க் இருந்தது. பங்குச் சந்தைகளில் யெஸ் பேங்க் பங்குகளை  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கி குவித்தனர். அப்போது யெஸ் பேங்கின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலவரம் சிறப்பாக இருந்ததே அதற்கு காரணம்.

யெஸ் பேங்க்

2018 ஆகஸ்ட் மாதத்தில் யெஸ் பேங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டது. யெஸ் பேங்க் பங்கு விலை ரூ.404ஆக உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு யெஸ் பேங்க் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி காண தொடங்கியது. 2018 நவம்பர் 27ம் தேதியன்று, தரமதிப்பீடு நிறுவமான மூடிஸ், யெஸ் பேங்க் தொடர்பான தனது கண்ணோட்டத்தை (மதிப்பீடு) நிலையான என்பதலிருந்து எதிர்மறை என மாற்றியது குறிப்பிடத்தக்கது. யெஸ் பேங்க் 2019 மார்ச் காலாண்டில் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்தது. இப்படி பல்வேறு காரணங்களால் யெஸ் பேங்க் பங்கு விலை தொடர் இறங்கி கொண்டே வந்தது. 

பங்கு விலை வீழ்ச்சி

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று யெஸ் பேங்கின் மோசமான நிதி நிலைமை குறிப்பிட்டு அந்த வங்கிக்கு ரிசர்வ வங்கி தடை விதித்தது. மேலும் யெஸ் பேங்கின் இயக்குனர்களை குழுவை சஸ்பெண்ட் செய்து நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் யெஸ் பேங்க் பங்கு விலை ஒரே நாளில்  56.04 சதவீதம் குறைந்து ரூ.16.20ஆக வீழ்ந்தது. வர்த்தகத்தின் இடையே இதுவரை இல்லாத அளவாக பங்கு விலை ரூ.5.55ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது. யெஸ் பேங்க் பங்கு விலை உச்சத்திலிருந்து வெறும் 18 மாதங்களில் மளமளவென சரிவு கண்டு இருப்பது, அந்த பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமும், பெரிய பண இழப்பும் ஏற்பட்டு இருக்கும்.