ஒய்எஸ்ஆர் கட்சிக்கு வாக்களிப்பது மரண உத்தரவாதம் எழுதுவதற்கு சமம்; சந்திரபாபு நாயுடு

 

ஒய்எஸ்ஆர் கட்சிக்கு வாக்களிப்பது மரண உத்தரவாதம் எழுதுவதற்கு சமம்; சந்திரபாபு நாயுடு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மரண உத்தரவாதம் எழுதுவதற்கு சமம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார்

விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மரண உத்தரவாதம் எழுதுவதற்கு சமம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சாடியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, ராகுல் போன்ற முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. அதேபோல், மொத்தம் 175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 11-ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

jagan mohan reddy

தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்து தெலுங்கு தேசம் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மரண உத்தரவாதம் எழுதுவதற்கு சமம் என சாடியுள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டிய நாயுடு, தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களித்தால் அது மக்களின் வெற்றி. ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மரண உத்தரவாதம் எழுதுவதற்கு சமம். நல்ல எதிர்காலம் மற்றும் வளர்ச்சிக்கு மக்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பிரசாரம் செய்தார்.

மாநில மக்களை கொடூரமாக ஏமாற்றிய பாஜக மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஜகன் மோகன் ரெட்டி கைகோர்த்துள்ளதாகவும் நாயுடு அப்போது கடுமையாக சாடினார்.

ys vivekananda reddy

ஜெகன் மோகன் ரெட்டி தனது சித்தப்பா ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் கொலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்த சந்திரபாபு நாயுடு, அவரது சொந்த வீட்டிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், தடயங்களை அழித்து அவர் மாரடைப்பால் இறந்ததாக மக்களை நம்ப வைக்க முயற்சி செய்தனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர், ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி. முன்னாள் எம்.பி.,-யான இவர், கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த போது, மர்ம நபர்களால் சில தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.