ஒன்னு குறைந்தாலும், இன்னொன்னு தூக்கி விடும்… ஆனந்த் மகிந்திராவை ஏமாற்றாத நிறுவனங்கள்….

 

ஒன்னு குறைந்தாலும், இன்னொன்னு தூக்கி விடும்… ஆனந்த் மகிந்திராவை ஏமாற்றாத நிறுவனங்கள்….

மகிந்திரா குழுமத்தின் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் சரிவடைந்துள்ளது அதேசமயம் மற்றொரு துணை நிறுவனமான டெக் மகிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஆனந்த் மகிந்திரா தலைமையிலான மகிந்திரா குழுமம் வாகனம், ஐ.டி. என பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. மகிந்திரா குழுமத்தின் டெக் மகிந்திரா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் அண்மையில் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அதில் மகிந்திரா நிறுவனத்தின் லாபத்தில் சறுக்கல் ஏற்பட்டபோதிலும், டெக் மகிந்திராவின் லாபம் ஏற்றம் கண்டுள்ளது. 

மகிந்திரா அண்டு மகிந்திரா

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) 26.5 சதவீதம் குறைந்துள்ளது. அந்த காலாண்டில் மகிந்திரா நிறுவனம் ரூ.121.3 கோடியை மட்டுமே நிகர லாபமாக ஈட்டியிருந்தது. 2018 செப்டம்ர் காலாண்டில் மகிந்திரா நிறுவனம் நிகர லாபமாக ரூ.164.9 கோடியை சம்பாதித்தது. 

டெக் மகிந்திரா

டெக் மகிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.773.50 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். 5ஜி, இணையபாதுகாப்பு, ப்ளாக்செயின், ஏ.ஐ. மற்றும் என்ஜினீயரிங் சேவைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக டெக் மகிந்திரா தெரிவித்துள்ளது.