ஐயப்பன் கோயில் நடை திறப்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் சபரிமலை

 

ஐயப்பன் கோயில் நடை திறப்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் சபரிமலை

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது

பத்தனம்திட்டா: சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மூடப்பட்டது.

இந்நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்ட கோயில் நடை, நாளை இரவு 10.30 மணிக்கு மீண்டும் மூடப்படும்.

முன்னதாக, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால் கோயில் நடை சாத்தப்படும் என தலைமை நம்பூதிரி கண்டராரு ராஜீவராரு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், சபரிமலை கோயிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும் என மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியும் எச்சரித்திருந்தார். அதேபோல், கோயிலுக்கு பெண் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க அனுப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதேசமயம், சபரிமலைக்கு பெண்கள் வர வாய்ப்பு இருப்பதால் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக சன்னிதானம் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சபரிமலை தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை கோயிலை பூட்டக் கூடாது. கோயில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.