ஐப்பசி மாத பௌர்ணமியும் அன்னாபிஷேக பலன்களும் 

 

ஐப்பசி மாத பௌர்ணமியும் அன்னாபிஷேக பலன்களும் 

ஐப்பசி மாத பௌர்ணமி தினமான இன்று அம்மையப்பராக இருந்து உலகை காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால் நம்முடைய வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் பெறலாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு அபிசேகம் செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது ஆகும்.

sivan

வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும். 

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. இனிப்பு,காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி,ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்குகிறது.

annabisekam

இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில் உள்ள சிவலிங்கத்திற்கும் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கும் இன்று அன்னாபிஷேக விழா மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது.

அது மட்டுமல்லாது தமிழகத்தில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களிலும் இன்று அன்னாபிஷேக பெரு விழா சிறப்பான முறையில் நடைபெற இருப்பதால் இன்று மாலை உங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்திற்க்கு சென்று சிவனை வழிபாடு செய்ய சகல சம்பத்தும் பெற்று நீங்கள் சிறப்புடன் வாழலாம்.

sivanjh

தஞ்சை பெரிய கோயிலில் லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு,இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

அதனையடுத்து சுமார்13 அடி உயரமும் 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. 

அதன்பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர்.

annabisekam

இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும் பேறாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இத்தகைய சிறப்பு மிக்க அன்னாபிஷேக காட்சியை யார் ஒருவர் பார்கின்றாரோ அவர்களுக்கு ராஜ யோகம் கிடைக்கும் என்றும் அவர்களுக்கு வருடம் தோறும் அன்னத்திற்கு குறைவு இருக்காது என்றும் நம் முன்னோர்கள் பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ளனர்.