ஐபிஎல் 2019: இன்று வீரர்கள் ஏலம்; சென்னை அணியில் இடம்பெறுவாரா யுவராஜ் சிங்?

 

ஐபிஎல் 2019: இன்று வீரர்கள் ஏலம்; சென்னை அணியில் இடம்பெறுவாரா யுவராஜ் சிங்?

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது

ஜெய்பூர்: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று நடக்கிறது. ஏலப் பட்டியலில் 346 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதுதவிர, லாஸ்ட் என்ட்ரியாக 4 வீரர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, மொத்தம் 350 என பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்முறை, வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலை என்பது ரூ.2 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது ‘Marquee List’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த உயர்தர லிஸ்டில் 9 வீரர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். ஆனால். அதில் ஒருவர் கூட இந்தியர் கிடையாது.

ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவித்துள்ளன. அதற்கு பதில், புதிய வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் ஆர்வமாக உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 3 வீரர்களை மட்டும் விடுவித்துள்ளது. பஞ்சாப் அணியில் இருந்து யுவராஜ் சிங் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 36 கோடியே 20 லட்சம் ரூபாயும், டெல்லி கேப்பிட்டல் அணி 25 கோடியே 50 லட்சம் ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 கோடியே 95 லட்சம் ரூபாயும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 கோடியே 15 லட்சம் ரூபாயும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 கோடியே 20 லட்சம் ரூபாயும், மும்பை இந்தியன்ஸ் அணி 11 கோடியே 15 லட்சம் ரூபாயும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 9 கோடியே 70 லட்சம் ரூபாயும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாயும் செலவிட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.