ஐஎஸ்எல் கால்பந்து; சென்னையை வீழ்த்தியது பெங்களூரு

 

ஐஎஸ்எல் கால்பந்து; சென்னையை வீழ்த்தியது பெங்களூரு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை, பெங்களூரு அணி வீழ்த்தியது

பெங்களூரு: ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை, பெங்களூரு அணி வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 5-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட், எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். துவக்க ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, கேரளா பிளாஸ்டர்சை சந்தித்தது. இந்த போட்டியில், கொல்கத்தாவை கேரள அணி வீழ்த்தியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி அணி, பெங்களூரு எப்.சி அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் 41-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் அடித்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் பெங்களூரு அணி முன்னிலை பெற்றது.

பந்து அதிக நேரம் சென்னை வீரர்கள் வசமே இருந்தாலும், ஆடட்ட நேர முடிவில், பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-கோவா அணிகள் மோதுகின்றன.