ஏற்றம் கண்டு சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

 

ஏற்றம் கண்டு சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவு கண்டது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது.

வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வை அமெரிக்க அதிபர் டிரம்ப் 15 தினங்களுக்கு ஒத்தி வைத்தார். இது போன்ற சாதகமான செய்திகளால் இன்று காலையில் பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டது. இருப்பினும், கடந்த மாத பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள், தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் பின்னர் பங்கு வர்த்தகம் மளமளவென சரிவு கண்டது.

பி.எஸ்.இ.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.சி,ஐ.சி.ஐ. வங்கி, சன்பார்மா, இண்டஸ்இந்த், ஸ்டேட் வங்கி மற்றும் டெக்மகிந்திரா உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், யெஸ்பேங்க, டாட்டா மோட்டார்ஸ், மாருதி, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,369 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,110 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 164 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.26 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.81 லட்சம் கோடியாக இருந்தது.

என்.எஸ்.இ.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 166.54 புள்ளிகள் குறைந்து 37,104.28 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 54.65 புள்ளிகள் இறங்கி 10,981.05 புள்ளிகளில் முடிவுற்றது.