ஏர்டெல் உள்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு ரூ.92 ஆயிரம் கோடி பாக்கி

 

ஏர்டெல் உள்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு ரூ.92 ஆயிரம் கோடி பாக்கி

ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் லைசென்ஸ் கட்டணமாக ரூ92 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். போன்ற நிறுவனங்களே தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பார்தி ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து லைசென்ஸ் கட்டணமாக ரூ.92 ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டியது உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

மொபைல் சேவை

லைசென்ஸ் கட்டணம் தொடர்பாக தொலைத்தொடர்பு பிரச்சினை தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வாடகை, சொத்துக்களை விற்பனை வாயிலாக கிடைத்த லாபம், டிவிடெண்டு மற்றும் கருவூல வருவாய் போன்ற தொலைதொடர்பு துறை சாரா வருவாயை சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் கணக்கு காட்ட வேண்டும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்துதான் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளன.

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொலைத்தொடர்பு துறை எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை அளித்துள்ளது. அதில்தான், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து லைசென்ஸ் கட்டணமாக ரூ.92,642 கோடி வசூலிக்க வேண்டியது உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.