ஏமாற்றங்கள் விலகும் ஆண்டாக புத்தாண்டு இருக்க வேண்டும்: ராமதாஸ் வாழ்த்து

 

ஏமாற்றங்கள் விலகும் ஆண்டாக புத்தாண்டு இருக்க வேண்டும்: ராமதாஸ் வாழ்த்து

ஏமாற்றங்கள் விலகி மாற்றங்கள் மலரும் ஆண்டாக புத்தாண்டு இருக்க வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: ஏமாற்றங்கள் விலகி மாற்றங்கள் மலரும் ஆண்டாக புத்தாண்டு இருக்க வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், ஒவ்வொரு புதிய ஆண்டும் ஏராளமான எதிர்பார்ப்புகளையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கையையும் சுமந்து கொண்டு தான் பிறக்கின்றன.  அவ்வகையில், நம்பிக்கைகளின் ஆண்டான 2019-ஆம் ஆண்டு பிறப்பை வரவேற்கும் வகையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் உலக மக்கள்  அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

துயரங்களும், பாதிப்புகளும் இன்றுடன் விலகும்… நாளை முதல் நல்லது நடக்கும் என்பது தான் அனைத்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால், எந்த ஆதாரமும் இல்லாத ஏழைகளின் வாழ்வில் மட்டும் எந்த நன்மையும் நடப்பதில்லை. முன்னேற்றம் என்பது அவர்களுக்கு கனவாகவே உள்ளது.

உழவர்களைப் பொறுத்தவரை 2018-ஆம் ஆண்டு அவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பறிக்க முயன்ற ஆண்டு என்றால் அதில் சந்தேகமில்லை. தமிழகத்திற்கு தேவையே இல்லாத சென்னை& சேலம் எட்டுவழிச் சாலைக்காக 10,000 வேளாண் குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த வேளாண்  விளைநிலங்களை பறிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்து இதற்கு இடைக்காலத் தடை பெற்றுள்ளார். மற்றொருபுறம் காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் விளைநிலங்களை பாழ்படுத்தும் சதிகள் தொடருகின்றன.

வடக்கே காஞ்சிபுரம் – வேலூரில் தொடங்கி மேற்கே சேலம்- கோவை வரை 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதற்காக வேளாண் விளைநிலங்களை அரசு நிறுவனங்களே ஆக்கிரமித்த கொடுமையையும் 2018-ஆம் ஆண்டு கண்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு வழிகளில் வேளாண்மைக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன.

2018-ஆம் ஆண்டில் இயற்கையும் நம்மீது கருணை காட்டவில்லை. 2015-ஆம் ஆண்டில் அடைமழை வெள்ளம், 2016-ஆம் ஆண்டில் வர்தா புயல், 2017-ஆம் ஆண்டில் ஒக்கிப் புயல் என இயற்கைச் சீற்றங்களை தொடர்ந்து சந்தித்த தமிழ்நாடு, 2018-ஆம் ஆண்டில் கஜா புயலால் சிதைக்கப்பட்டது. உழவர்களும், அப்பாவி பொதுமக்களும் வரலாறு காணாத இழப்புகளையும், துயரங்களையும் சந்தித்துள்ள நிலையில் அவர்களுக்கு சக மனிதர்கள் செய்த உதவிகளைக் கூட அரசு எந்திரம் செய்யவில்லை. தமிழகத்தில் மகிழ்ச்சி பெருக வேண்டுமானால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு  ஏற்பட வேண்டும்.

ஆகவே, 2019ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். அல்லவை அகன்று நல்லவை நிறைந்த ஆண்டாக 2019-ஆம் ஆண்டு  அமைய வேண்டும். தமிழ்நாடு இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் பழங்கதையாகி  மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதன் பயனாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும்  வளர்ச்சியும், மலர்ச்சியும் மட்டுமே தொடர்கதையாக வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே உழைக்க ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.