ஏமாறுவதில் தமிழக மக்கள் தான் இந்தியாவின் முன்னோடிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்!

 

ஏமாறுவதில் தமிழக மக்கள் தான் இந்தியாவின் முன்னோடிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்!

தமிழகத்தில் பா.ஜ.கவின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி : தமிழகத்தில் பா.ஜ.கவின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ponanr

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக கிட்டத்தட்ட 52 ஆண்டுகளாகப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி வருகிறது. அதை மக்களும் நம்பி வருகின்றனர். ஏமாறுவதில் தமிழக மக்கள் தான் இந்தியாவின் முன்னோடிகள். தமிழகத்திற்கு, பிரதமர் மோடி கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி அளவிலான திட்டங்களைத் தந்துள்ளார். ஆனால்  பா.ஜ.கவின் தோல்விக்குக் காரணம் மோடியின் திட்டங்களைக் கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்காதது தான். அதனால் தமிழகத்தில் பா.ஜ.கவின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்’ என்றார்.

hindi

தொடர்ந்து பேசிய அவரிடம் மும்மொழி கொள்கையைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, ‘வேலைக்காக ஆங்கிலத்தை கற்று வைத்திருக்கும் போது,  நமது இந்திய மொழியான இந்தியை ஏன் கற்கக்கூடாது. தமிழகத்தில் இந்தியை கற்பதால் ஒன்றும் தமிழ் மொழி அழிந்து விடப் போவதில்லை’ என்று கூறியுள்ளார். 

முன்னதாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்  காங்கிரஸ் வேட்பாளர் வசந்த்குமாரிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.