ஏப்.24 முதல் ரமலான் நோன்பு… உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்!

 

ஏப்.24 முதல் ரமலான் நோன்பு… உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்!

ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ரமலான் நோன்பு இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மே 23-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ரமலான் நோன்பு இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மே 23-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. நோன்பையொட்டி இஸ்லாமியர்கள் இந்த மாதம் முழுவதும் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு  நடைமுறையில் இருக்கும் நிலையில், ரமலான் நோன்பை எப்படி பாதுகாப்பாக கடைபிடிப்பது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

ரமலான்

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதம் தொடர்பான ஒன்று கூடலை முற்றிலுமாகத் தடை செய்வது அவசியமானது. இதுதொடர்பான முக்கிய முடிவுகளை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே எடுத்துக் கொள்ளலாம். மசூதிகளில் ஒன்று கூடுதலை தவிர்த்து, தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் மூலமாக மத செயல்பாடுகளை அனைவருக்கும் பரப்பலாம். ஒருவேளை அரசாங்கங்களால் மதச் செயல்பாடுகளுக்காக ஒன்று கூடுதல் அனுமதிக்கப்பட்டால், கொரோனா தொற்று வேகமாகப் பரவக்கூட வாய்ப்புள்ளது” என எச்சரித்துள்ளது. 

Ramalan

உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்:

* பொருட்கள் வாங்க பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்

* ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தூரம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்

* கொரோனா அறிகுறி உள்ளவர்கள் எவ்விதக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளாது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். நோய் தொற்று எளிதில் பரவும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

* நேரடி முறையில் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளாமல் மாற்று வழிகளில் அவற்றை மேற்கொள்ள வேண்டும்.

* ரமலான் நோன்பு தொடர்பான கூட்டங்களை மூடிய இடங்களில் நடத்தாது திறந்த வெளியில் காற்றோட்டமாக நடத்தவேண்டும்

* ரமலான் தொடர்பான தொழுகைகள் மற்றும் கூட்டங்களில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் முழு விவரங்களையும் உரிய அமைப்புகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

*தொழுகைக்கு முன்னதாகக் கலந்துகொள்ளும் அனைவரும் சானிடைஸர்களை பயன்படுத்திக் கை கழுவ வேண்டும். அவரவர் சொந்த விரிப்புகளையே பயன்படுத்த வேண்டும்.

* நிகழ்ச்சியில் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்த வேண்டும்.

* பொது மக்கள் கூடித் தொழுகை நடத்தும் இடங்களைத் தொடர்ச்சியான முறையில் சுத்தம் செய்து கிருமிநாசினிகளைக் கொண்டு கழுவ வேண்டும்