ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் உலகின் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசல்… விலையும் கொஞ்சம் கூடுமாம்…

 

ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் உலகின் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசல்… விலையும் கொஞ்சம் கூடுமாம்…

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உலகின் சுத்தமான (பி.எஸ்.6 ரக) பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு வருகிறது. தற்போது உபயோகத்தில் உள்ள பி.எஸ்.4 ரக எரிபொருள் (பெட்ரோல் மற்றும் டீசல்) மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

வாகன உமிழ்வை குறைக்கும் சல்பர் குறைவாக (10 பிபிஎம்) உள்ள பெட்ரோல் மற்றும் டீசலை குறைவான நாடுகளே பயன்படுத்துகின்றன. அந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நம் நாடு பி.எஸ்.4 ரக எரிபொருளிலிருந்து பி.எஸ்.6 ரக எரிபொருளுக்கு மாற உள்ளது. அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

2010ல் பி.எஸ்.3 ரக எரிபொருட்கள் பயன்பாட்டில் இருந்தது. பின் பி.எஸ்.4 ரக எரிபொருளுக்கு மாற 7 ஆண்டுகள் ஆனது. ஆனால் தற்போது பி.எஸ்.4 ரக எரிபொருளிலிருந்து பி.எஸ்.6 ரக எரிபொருளுக்கு மாற 3 ஆண்டுகள் மட்டுமே ஆனது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் சிங் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு இறுதிக்குள் எங்களது அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளும் அல்ட்ரா லோ சல்பர் பி.எஸ்.6 ரக பெட்ரோல் மற்றும் டீசலை உற்பத்தி  செய்ய தொடங்கி விட்டன.

பெட்ரோல் பங்கு

எண்ணெய் நிறுவனங்கள் தற்போது நாட்டின் ஒவ்வொரு துளி எரிபொருளையும் புதியதாக (பி.எஸ்.6 ரக எரிபொருள்) மாற்றுவதற்கான கடினமான பணியை மேற்கொண்டுள்ளன. நாங்கள் ஏப்ரல் 1 முதல் பி.எஸ்.6 ரக எரிபொருளை வழங்குவதற்கான பாதையில் நாங்கள் செயல்பட்டுள்ளோம். கிட்டத்தட்ட அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளும் பி.எஸ்.6 ரக எரிபொருளை சப்ளை செய்ய தொடங்கி விட்டன. மேலும் நாடு முழுவதும் உள்ள சேமிப்பு கிடங்குகளை அவை அடைந்துள்ளன. அங்கு இருந்து பெட்ரோல் பம்புகளுக்கு  பி.எஸ்.6 ரக எரிபொருள் பயணிக்க தொடங்கி விட்டது. அடுத்த சில வாரங்களில் அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் விற்பனையாகும் எரிபொருள் பி.எஸ்.6 ரக எரிபொருளாக இருக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பி.எஸ்.6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு வருவதால் அவற்றின் விலையும் லிட்டருக்கு 50 காசுகள் முதல் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.