எஸ்.பி.ஜி. திருத்த மசோதா அறிமுகம்! பிரதமருடன் சேர்ந்து வசித்தால் மட்டுமே அவரது நெருங்கிய உறவினர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு

 

எஸ்.பி.ஜி. திருத்த மசோதா அறிமுகம்! பிரதமருடன் சேர்ந்து வசித்தால் மட்டுமே அவரது நெருங்கிய உறவினர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு

பிரதமருடன் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சேர்ந்து வசித்தால் மட்டுமே அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கும் வகையில் எஸ்.பி.ஜி. மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது. திருத்தப்பட்ட மசோதாவின்படி, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவருடன் சேர்ந்து வசிக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கும். பிரதமருடன் சேர்ந்து வசிக்காத நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படாது.

பிரதமர் மோடி

மேலும் எந்தவொரு முன்னாள் பிரதமருக்கும், அவருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவருடன் சேர்ந்து வசிக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் 5 ஆண்டுகள் வரை மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு கிடைக்கும். பிரதமர் அலுவலகத்தில் அவரது பணிகாலம் முடிவடைந்த நாள் முதல் 5 ஆண்டுகள் வரை எஸ்.பி.ஜி. பாதுகாப்பு கிடைக்கும். முன்னாள் பிரதமரின் நெருங்கிய உறவினர்கள் அவருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் சேர்ந்து வசிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படாது.

சோனியா காந்தி குடும்பத்தினர்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் படுகொலை  செய்யப்பட்டதையடுத்து பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. 1988ல் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டம் இயற்றப்பட்டது. 1991, 1994, 1999 மற்றும் 2003ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விரிவுப்படுத்தப்பட்டது. இதன் பலனாக சோனியா காந்தி குடும்பத்தினர் கடந்த 28 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி. பாதுகாப்பு பலனை அனுபவித்து வந்தார்கள். அண்மையில்தான், காந்தி குடும்பத்தினருக்கான எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதேசமயம் அவர்களுக்கு இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.