எளிமையும் உண்மையும் கொண்ட மனிதர்களின் பதிவு..!  நீர்மை, பெருந்தொண்டர் ஆவணப்படங்கள் வெளியீடு 

 

எளிமையும் உண்மையும் கொண்ட மனிதர்களின் பதிவு..!  நீர்மை, பெருந்தொண்டர் ஆவணப்படங்கள் வெளியீடு 

வாழ்வின் பாதையில் வேறுபட்ட தளங்களில் வாழ்ந்தாலும் எளிமையையும் உண்மையையும் கைவிடாத  பிரபல ஓவியர் மனோகர், பெரியார் தொண்டர் ஒளிச்செங்கோ பற்றிய நீர்மை, பெருந்தொண்டர் ஆவணப்படங்கள் திரையிடலும், வெளியீடும் கே. கே. நகர் டிஸ்கவரி பேலஸ் அரங்கில் நடந்தது. 

வாழ்வின் பாதையில் வேறுபட்ட தளங்களில் வாழ்ந்தாலும் எளிமையையும் உண்மையையும் கைவிடாத  பிரபல ஓவியர் மனோகர், பெரியார் தொண்டர் ஒளிச்செங்கோ பற்றிய நீர்மை, பெருந்தொண்டர் ஆவணப்படங்கள் திரையிடலும், வெளியீடும் கே. கே. நகர் டிஸ்கவரி பேலஸ் அரங்கில் நடந்தது. 

பெருந்தொண்டர்

திரையிடல் நிகழ்வில் நடிகர் பொன்வண்ணன், ஒளிப்பதிவாளர் வொய்டுஆங்கிள் ரவிசங்கர், லலித்கலா அகாதெமி முன்னாள் இயக்குநர் ஆர்.எம்.பழனியப்பன், ஆய்வாளர் ரெங்கையா முருகன், இயக்குநர் சரவண ராஜேந்திரன், ஓவியர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
எழுத்தாளர்கள், ஓவியர்கள் என பல்வேறு கலை இலக்கிய ஆளுமைகளை ஒளிப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்திவரும் புதுவை இளவேனில் ஒளிப்பதிவில்  அரசு ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வரும் ஓவியருமான மனோகரைப் பற்றிய ‘நீர்மை’ என்ற ஆவணப்படத்தை என். அசோகன் இயக்கியுள்ளார். 
கடந்த 35 ஆண்டுகளாக  ஓவியவெளியில் ஒரு பறவையைப்போல இயங்கிவரும்  மனோகர், ஏராளமான மாணவர்களை திறமையான ஓவியக்கலைஞர்களாக உருவாக்கியுள்ளார். மனோகரைப் பற்றியும் அவரது நீர்வண்ண ஓவியங்களின் உருவாக்கம் பற்றியும் ஆவணப்படுத்தியிருப்பதில் ‘நீர்மை’ தனிக்கவனம் பெற்றுள்ளது. 

nermai-documentary-release

இதேபோல் பெரியாரின் கொள்கைகளைக் கடைபிடித்து, கட்சியில் எந்தப் பதவியும் எதிர்பாராமல் தம் வாழ்நாளை பொதுவாழ்வுக்கு அர்ப்பணித்து வாழ்ந்துவரும் பெரியார் தொண்டரான சு.ஒளிச்செங்கோவைப் பற்றிய ‘பெருந்தொண்டர்’ ஆவணப்படத்தை புதுவை இளவேனில் இயக்கியுள்ளார். 
முதலில் பேசிய ஆர்.எம். பழனியப்பன், “ஓவியர் மனோகரின் ஓவியங்கள் தமிழர்களின் மரபு சார்ந்தவையாக இருக்கின்றன. அவருடைய நீர்வண்ண ஓவியங்கள் தனித்துவமானவையாக உள்ளன. இந்திய அளவில் ஓவியத்தில் சென்னை ஸ்கூல் ஆப் ஆர்ட்டுக்கு தனி மரியாதை இருக்கிறது. மனோகரின் ஓவியங்கள் இயற்கையும் தன்னுடைய நிலப்பகுதியும் பதிவாகியிருக்கிறது. பலநூறு மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார். இது யாருக்கும் கிடைக்காத பாக்கியம். நீர்மை போன்ற ஆவணப்படங்கள் போன்ற நிறைய உருவாக்கப்படவேண்டும். 
பெருந்தொண்டர் படத்தில் வரும் ஒளிச்செங்கோவைப் பார்க்கும்போது என் அப்பாவின்  ஞாபகம் வருகிறது. அவரும் திராவிடர் கழகத்தில் இருந்தார். பெரியார் புத்தகங்கள் வீட்டில் நிறைய இருக்கும். இதுபோன்ற எளிமையான மனிதர்களைப் பார்ப்பது இன்றைக்கு அரிதாகிவிட்டது. இரண்டு படங்களும் அதனதன் வழியில் சிறப்பானவையாக வந்திருக்கின்றன. என். அசோகன், புதுவை இளவேனில் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்” என்றார். 

nermai-documentary-release-03

ஆய்வாளர் ரெங்கையா முருகன், “ சொர்ணவேல் இயக்கிய பெரியோன் ஆவணப்படத்தில் ஒளிச்செங்கோ பேசியதைக் கேட்டேன். அதில் சிலப்பதிகாரத்தில் வரும் பரிசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி சமஸ்கிருத அறிஞர் நாவல்பாக்கம் தேவனாச்சாரியாரைச் சந்தித்ததைப் பற்றிச் சொல்லியிருப்பார். பெரியாரைப் பின்பற்றும் மனிதர்,  ஒரு வார்த்தைக்காக பலரைத் தேடியிருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருக்கிறது. இன்றைய. நிலையில் அவரைப் பற்றிய ஆவணப்படம் தேவையானது” என்று பாராட்டினார். 
ஓவியர் இளையராஜா, “எங்களுக்கு ஆசிரியராக இருந்தாலும், மனோகர் அண்ணன் என்று கூப்பிட்டுத்தான் பழக்கம். என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறார். இன்று நான் இருக்கும் உயரத்திற்கு அண்ணன்தான் காரணம். எப்போதும் அவரைப் பார்த்தாலும் ஒரு சீட் எடுக்கச் சொல்லி வரைய ஆரம்பித்துவிடுவார். நாம் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். இப்படித்தான் அவருடைய கற்பித்தல் முறை இருக்கும்” என்று நெகிழ்ந்தார். 

nermai-documentary-release-05

இயக்குநர் சரவண ராஜேந்திரன், “யாதும் ஊரே என்று சொன்னாலும், ஊர் என்றதும் உள்ளுக்குள் ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. ஓவியர் மனோகரின் கும்பகோணமும் கண்கொடுத்தவனிதம் கிராமமும் எங்களுக்கு ஊருக்கு அருகிலுள்ளவை. காவ்யா என்ற கையெழுத்துப் பத்திரிகை வழியாகத்தான் சுந்தரபுத்தன் எனக்கு அறிமுகம். இரண்டு படங்களுமே நான் புழங்கிய நிலப்பகுதியில் இருக்கும் எளிமையான மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது. எளிமையும் உண்மையும் அரசியலில் பறிபோனதால்தான் நாம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம்” என்று எதார்த்தமாகப் பேசினார். 

nermai-documentary-release-04

நடிகர் பொன்வண்ணன், “இந்த ஆவணப்படங்களில் வரும் இருவருமே எளிமையும் உண்மையுமாக இருக்கிறார்கள். அதைத்தான் நாம் இழந்துவிட்டோம். பெருந்தொண்டர் படத்தைப் பார்க்கும்போது என் கிராமத்தின் நினைவுகள் வருகின்றன. ஈரோட்டுக்குப் பக்கத்தில்தான் என் கிராமம். நான் பெரியாரின் கொள்கைகளை 50 சதவீதம்தான் பின்பற்றியிருப்பேன். இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தப்படவேண்டும்” என்று கூறினார். 
“புதுவை இளவேனிலின் ஆவணப்பட முயற்சிகளைப் பாராட்டுகிறேன். கிரா பற்றி அவர் எடுத்திருந்த படத்தை என்னிடம்தான் முதலில் காட்டினார். நீர்மையைப் பார்க்கும்போது ஓவியர் மனோகரின் எளிமையும் அன்பும் வெளிப்படுகிறது” என்றார் வொய்டு ஆங்கிள் ரவிசங்கர். 

nermai-documentary-release-06

ஏற்புரையில் ஓவியர் மனோகர், “எனக்கு ஆரம்பத்தில் விருப்பமில்லை. அசோகனும் இளவேனிலும் வற்புறுத்தியதால்தான் ஒப்புக்கொண்டேன். இந்த ஆவணப்படம் எதிர்கால ஓவியத் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.