எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

 

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மதுரை: மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கடந்த 2015-16-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிபட்டி, பெருந்துறை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.  தொடர்ந்து, மதுரை தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் 202 ஏக்கர் பரப்பளவில், 750 படுக்கை வசதிகளுடன், 100 எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களுடனும், 60 செவிலியர் படிப்புக்கான இடங்களுடனும்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறும் எனவும், அதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து, மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவருடன் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விழாவை தொடர்ந்து பாஜக மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.