எய்ட்ஸ் எப்படி பரவுகிறது? 10-ஆம் வகுப்பு பாடத்தில் குளறுபடி தகவல்!

 

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது? 10-ஆம் வகுப்பு பாடத்தில் குளறுபடி தகவல்!

எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறது என்பது குறித்து கேரள மாநில பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திருவனந்தபுரம்: எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறது என்பது குறித்து கேரள மாநில பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எச்.ஐ.வி என்பது ஒருவகை நுண்கிருமி (வைரஸ்) ஆகும். இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. எய்ட்ஸ் என்பது எச்.ஐ.வி நுண்கிருமியினால் ஏற்படும் பல நோய்க்குறிகளின் தொகுப்பாகும். பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ். எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. எனினும், எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி எளிதில் தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் நோயை தடுக்கவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை அரசு செய்து வருகிறது. எச்.ஐ.வி கிருமி பரவும் விதம் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், வதந்திகளை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறது என்பது குறித்து கேரள மாநில அரசின் 10-ஆம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், எச்.ஐ.வி வைரஸ் பரவுவதற்கான காரணங்கள் என்ன? என்ற கேள்விக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

HIV

அந்த விடைகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்றப்பட்ட ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்துவது. உடல் திரவங்கள் மூலமாக, எச்.ஐ.வி வைரஸ் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி வைரஸ் பரவும் என விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விடைகளில் ஒன்றாக, திருமணத்திற்கு முன்பான உடலுறவு அல்லது திருமணத்திற்கு புறம்பான உடலுறவு கொள்வதால் எச்.ஐ.வி வைரஸ் பரவுகிறது எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள அம்மாநில மருத்துவர்கள், எச்.ஐ.வி வைரஸுக்கு திருமணம் ஆனவரா அல்லது ஆகாதவரா என்பது எப்படி தெரியும் என கேள்வி எழுப்பியதுடன், அந்த விடைக்கு பதிலாக, ‘பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் எச்.ஐ.வி வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் நோய் தொற்று ஏற்படும்’ என கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த புத்தகத்தை வெளியிட்ட மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அளித்துள்ள விளக்கத்தில், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவறுகளை அடையாளம் கண்டுள்ளோம். 2019 ஜூன் மாதம் தொடங்கி வரவிருக்கும் கல்வி ஆண்டில் தேவையான மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். புத்தகத்தில் மட்டுமே அவ்வாறு அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் சரியாகவே பயிற்றுவிக்க படுகின்றனர் என தெரிவித்துள்ளது.