எம்.ஜி.ஆர் இருந்தப்போ ராமாவரம் தோட்டத்திற்கு போனால் எப்படி கவனித்து அனுப்புவாரோ ; அவர் பெயரிலுள்ள ஹோட்டலிலும் அப்படிதான்!

 

எம்.ஜி.ஆர் இருந்தப்போ ராமாவரம் தோட்டத்திற்கு போனால் எப்படி கவனித்து அனுப்புவாரோ ; அவர் பெயரிலுள்ள ஹோட்டலிலும் அப்படிதான்!

மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி பலகதைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள்
ஆனால்,அவரைப்பற்றி அதிகம் வெளியே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது.

சேலம்: மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி பலகதைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள்
ஆனால்,அவரைப்பற்றி அதிகம் வெளியே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. அவர் ஒரு சாப்பாட்டு ரசிகர்.தமிழகமெங்கும் தனக்குப் பிடித்த ஹோட்டல்கள் என்று ஒரு லிஸ்டே வைத்திருந்தார்.

நடிகராக இருந்தபோதும் முதல்வராக இருந்தபோதும் அந்த ஹோட்டல்களில் இருந்துதான் அவருக்கு உணவு வரவேண்டும்.அப்படி ஒரு உணவகத்தைத்தான் பற்றித்தான் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.

எம்.ஜி.ஆர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்த காலத்தில் அவருக்குப் பிடித்த ஹோட்டல் அது. சேலம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய உணவகம் அது.அந்த ஹோட்டலை இப்போது காந்தி என்கிற இளைஞர் நடத்திக்கொண்டு இருக்கிறார்.அவருடைய தந்தை பழனிச்சாமி துவங்கிய ஹோட்டல் இது.

mgr

ஏதோ ஒரு முறை கடந்து போகிற வழியில்  இங்கே டீ குடித்த எம்.ஜி.ஆருக்கு அதன் சுவை பிடித்துப்போக,அதற்காகவே அந்த உணவகம் வழியாகப் போவாராம் எம்.ஜி.ஆர்! அப்படி அவர் அடிக்கடி வந்து போனதால் உள்ளூர் மக்கள் பெயர்பலகைகூட இல்லாத அந்த ஹோட்டலை ‘அட,எம்.ஜி.யார் கோட வந்து டீ குடிப்பாரல்லோ,அந்த ஓடலு.’ ‘அந்த ஆலமரம் இருக்குதல்லோ அவத்தால போங்க எம்.ஜி.ஆர் ஓட்டலிருக்குதுங்’ என்றும் ஊர் மக்கள் சொல்லிச் சொல்லிதான் அந்த ஹோட்டலுக்கு இந்த பெயரே வந்தது.

காந்திக்கே இதெல்லாம் செவிவழிச் செய்திதான்.ஆனால் அரை நூற்றாண்டு கடந்தும் அன்று எம்ஜியாரை அசத்திய சுவையை அப்படியே தக்கவைத்து இருக்கிறார்கள்.பதினைந்துக்கு இருபது சைஸில் ஒரு குட்டி ஹால்தான் அது.சுவற்றை ஒட்டி ஒரு பெஞ்ச் போட்டு எதிரில் டேபிள் போட்டிருக்கிறார்கள். காலை ஏழுமணிக்கெல்லாம் உணவகம் களைகட்டி விடுகிறது. 

mgr

எங்கும் கிடைக்கும் இட்லி தோசைதான் இங்கும் தருகிறார்கள்.ஆனால் அதற்கு கிடைக்கும் சைட் டிஷ்தான் ஆச்சரியம்.அந்த காலை நேரத்திலேயே சுடச்சுட ரத்தப்பொரியல்,குடல் குழம்பு, தலைக்கறி ,சிக்கன் என்று விதவிதமான நான்வெஜ் வெரைட்டிகள் அணிவகுக்கின்றன.

உங்களால் இதில் ஒரே ஒரு சைட்டிஷோடு போதும் என்று சொல்லிவிட முடியாது,அத்தனை சுவை.இது காலை நேரத்து கதை,மதிய உணவு இன்னும் சிறப்பானது .அப்போது ஆடு கோழியுடன் மீன்களும் சேர்ந்து கொள்ளும்.எல்லா குழம்பு வகைகளும் வீட்டில் உள்ள பெண்களால் தயாரிக்கப் படுபவை.அவர்கள் கடைகளில் விற்கும் எந்த பிராண்டட் மசாலாப் பொடிகளையும் வாங்குவதில்லை.வாரச்சந்தைக்கு போய் மிளகாய்,மல்லி,மஞ்சள்,மிளகு,சீரகம் முதல் அவர்களே தேடித்தேடி வாங்குகிறார்கள்.அதை வறுத்து பொடித்து தங்களுக்குத் தேவையான மசாலாக்களை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள்.

நம் முன்னோர்கள் எந்த காயை,அல்லது கறியை என்ன பக்குவத்தில் சாப்பிட்டார்களோ அதே பக்குவத்தில் அதே சுவையுடன் தருகிறார்கள் இந்த எம்ஜிஆர் ஹோட்டலில்.அடுத்த முறை சேலம் போனால் ஊரை நெருங்கும் முன்பே நரசிங்கபுரம் போய் இந்த உணவகத்தில் ஒருமுறை ருசித்து பாருங்கள்.அப்புறம் விடவே மாட்டீர்கள்.

கடைசியா ஒரு தகவல்;ராமாவரம் தோட்டத்தில் பணம் வாங்க மாட்டார்கள். இங்கே கொடுத்துதான் ஆகவேண்டும்.ஆனால்,நம்ப முடியாத விலையில் கொடுக்கிறது இன்னொரு ஆச்சரியம்.