எம்.எல்.ஏ- வும் நடிகருமான கருணாஸ் அதிரடி கைது!

 

எம்.எல்.ஏ- வும் நடிகருமான கருணாஸ் அதிரடி கைது!

முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக இன்று அதிகாலையில் எம்.எல்.ஏ கருணாசை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை: முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக இன்று அதிகாலையில் எம்.எல்.ஏ கருணாஸை  காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், “சாமி, சிங்கம் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதே போல் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அட்வைஸ் கொடுக்க வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே பேசியவன். உங்களுக்கு போதை ஏற்றினால் தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம் என்று பேசினார்.

மேலும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். தமிழக முதல்வரை மேடையில் விமர்சித்த அவர் , குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும் சில கருத்துகளை பேசியிருந்தார். மேலும் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டது குறித்தும் கருணாஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக காவல்துறை கடந்த 21-ம் தேதி கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், தான் தலைமறைவாகவில்லை எனவும், தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடவும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு காவல்துறையினர் அதிரடியாக சென்று அவரை கைது செய்தனர். மேலும் கருணாஸுடன் அவரது கட்சியை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.