என் கன்னத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது: நடிகர் பிரகாஷ் ராஜ் உருக்கம்!

 

என் கன்னத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது: நடிகர் பிரகாஷ் ராஜ் உருக்கம்!

தேர்தலில் தோல்வி அடைந்துள்ள பிரகாஷ் ராஜ், என் கன்னத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது என்று கூறியுள்ளார். 

praaksh

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனிடையே பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ்,  தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஆதரவு தெரிவித்தது. 

prakash

இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.  அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்ஷத், பாஜக சார்பில் தற்போதைய எம்.பி, பி.சி.மோகன் உட்படப் பலர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் முன்னிலை வகிக்கிறார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளர் உள்ள நிலையில் பிரகாஷ் ராஜ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.  இருப்பினும் பாஜக 542 தொகுதிகளில் 340 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

 

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘என் கன்னத்தில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. கேலிகளும், விமர்சனங்களும் என் மேல் வைக்கப்படும். எனது நிலையிலிருந்து நான் மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் தொடரும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய பயணம் தொடங்கியுள்ளது. எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்’  எனத் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்டத் தோல்வி  முகம் தழுவியதால் பிரகாஷ் ராஜ்  விரக்தியில் இது போன்ற பதிவைப் பதிவிட்டுள்ளதாக பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.