‘எனது அப்பா இந்திய அரசு வழங்கும் விருந்தோம்பலை அனுபவித்து வருகிறார்’ : கார்த்தி சிதம்பரம் பேட்டி!

 

‘எனது அப்பா இந்திய அரசு வழங்கும் விருந்தோம்பலை அனுபவித்து வருகிறார்’ : கார்த்தி சிதம்பரம் பேட்டி!

புதுடெல்லி:  சிபிஐ காவலில் உள்ள தனது தந்தை சிதம்பரம்,  உற்சாக மனநிலையில் உள்ளார் என்று  அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நேற்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கியதோடு, வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் உள்ள சிதம்பரத்தை அவரது மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எனது தந்தை உற்சாக மனநிலையில் உள்ளார். என்னையும் அம்மாவையும் சந்தித்ததில் அவருக்கு மகிழ்ச்சி. இன்றைய நீதிமன்ற நிகழ்வுகள் குறித்து விவாதித்தோம். அவர் என் மகளை குறித்துக் கேட்டறிந்தார். நல்ல நிலையில் உள்ளார். இந்திய அரசு வழங்கும் விருந்தோம்பலை அனுபவித்து வருகிறார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்’ என்றார்.