எதிர்பாராத சூழ்நிலையில் வங்கிகள் மூடப்பட்டால்… கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கும் இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு….

 

எதிர்பாராத சூழ்நிலையில் வங்கிகள் மூடப்பட்டால்… கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கும் இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு….

எதிர்பாராத சூழ்நிலையில் வங்கிகள் மூடப்பட்டால், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனம்தான் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத கழகம். இந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளுக்கும் டெபாசிட் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது வங்கிகளின் சேமிப்பு, நிரந்தர, நடப்பு மற்றும் தொடர் வைப்பு உள்பட அனைத்து டெபாசிட்களுக்கும் இந்நிறுவனம் காப்பீடு வழங்குகிறது. 

டி.ஐ.ஜி.ஜி.சி.

எதிர்பாராத வகையில் எந்தவொரு வங்கியும் நிதிநெருக்கடியால் சிக்கி மூடப்பட்டால் அந்த வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இந்நிறுவனம் இழப்பீடு வழங்கும். அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கும். இந்த காப்பீடு திட்டத்துக்காக வங்கிகளிடம் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத கழகம் பிரிமீயம் வசூலிக்கும். வாடிக்கையாளர்களிடம் பிரிமீயம் வசூலிக்காது.

நிர்மலா சீதாராமன்

சமீபத்தில் மும்பையை சேர்ந்த பஞ்சாப் மற்றும் மராட்டிய கூட்டுறவு வங்கியில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்தது வெளியே தெரிந்தது. இதனையடுத்து அந்த கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளை முடக்கியது. இதனால் அந்த கூட்டுறவு வங்கியில் பணம் போட்டவர்கள் பரிதவித்து போனார்கள். மேலும் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது பாதுகாப்பானது இல்லை என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. பி.எம்.சி. வங்கியில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து, டெபாசிட்டுகளுக்கு இழப்பீடு வழங்கும் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பி.எம்.சி. வங்கி

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், டெபாசிட்டுகளுக்கான காப்பீட்டு பாதுகாப்பு உச்சவரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அதாவது வங்கிகள் நிதிநெருக்கடியால் மூடப்பட்டால் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வரை டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத கழகம் வழங்கும்.

டெபாசிட் இன்சூரன்ஸ்

உதாரணமாக, எதிர்பாராத சூழ்நிலையில் மூடப்பட்ட வங்கியில் ஒருவர் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்து இருந்தால், அந்த நபருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வரை கிடைக்க தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இழப்பீடாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு டெபாசிட்டுகளுக்கான காப்பீட்டு பாதுகாப்பு உச்சவரம்பு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 1993ல் டெபாசிட்டுகளுக்கான காப்பீட்டு பாதுகாப்பு உச்சவரம்பு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக மாற்றியமைக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி

ஒரு வங்கியின் பல கிளைகளில் ஒருவர் பல கணக்குகள் வைத்திருந்தால், அவற்றை ஒன்றாக இணைத்து அதன் மொத்தமதிப்பை கணக்கிட்டுதான் இழப்பீடு வழங்கப்படும். ஒவ்வொரு கணக்குக்கும் தனித்தனியாக இழப்பீடு வழங்கப்படாது. மேலும், வங்கிகள் மூடப்பட்டால் மட்டுமே டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத கழகம் இழப்பீடு வழங்கும். வங்கி கவலைக்கிடமாக நிலையில் இருக்கும்போது இழப்பீடு வழங்காது.