எதிர்க்கட்சிகள் ஒரு ரூபாய் கூட நிவாரண நிதி கொடுக்கவில்லை என்ற சுஷில் மோடி…. நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ்

 

எதிர்க்கட்சிகள் ஒரு ரூபாய் கூட நிவாரண நிதி கொடுக்கவில்லை என்ற சுஷில் மோடி…. நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ்

பீகாரில் முதல்வர் நிவாரண நிதிக்கு காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு ரூபாய் கூட அளிக்கவில்லை என அம்மாநில துணை முதல்வர் சுஷில் மோடி கூறியதையடுத்து அவருக்கு காங்கிரஸ் மேலவை உறுப்பினர் நோட்டீஸ் அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வின் சுஷில் மோடி அம்மாநில துணை முதல்வராக உள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று சுஷில் மோடி டிவிட்டரில், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு ரூபாய் கூட பங்களிப்பு அளிக்கவில்லை என பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ், ஆர்.ஜே.டி.

சுஷில் மோடி இந்த டிவிட் அரசியல் வட்டாரத்தில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மேலவை உறுப்பினர் பிரேம் சந்திரா மிஸ்ரா, துணை முதல்வர் சுஷில் மோடிக்கு லீகல் நோட்டீஸ் (சட்ட அறிவிப்பு) அனுப்பினார். இது தொடர்பாக பிரேம் சந்திரா மிஸ்ரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒன்றுமே பங்களிக்கவில்லை என்ற சுஷில் மோடியின் கருத்து அப்பட்டமான பொய். 

பிரேம் சந்திரா மிஸ்ரா

தனது கருத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்குமாறும். மற்றும் உண்மைக்கு புறம்பான டிவிட் டெலிட் செய்யும்படியும் சுஷில் மோடியிடம் கேட்டேன். இருப்பினும் அவர் தனது டிவிட்களை திரும்ப பெறவும் இல்லை அல்லது எந்தவொரு மன்னிப்பும் கேட்கவில்லை. ஆகையால் சுஷில் மோடிக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினேன். பீகார் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் குமார் ரோகித்தும் சுஷில் மோடி கருத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அவருக்கு எதிராக எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.