எதிர்கால வசந்தத்திற்கான வழி

 

எதிர்கால வசந்தத்திற்கான வழி

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், 
‘மகனே! இது நமது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வரும் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன், எவ்வளவு விலைக்கு எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டுப்பார் என்றார்.
மகனும் தந்தை கூறியதைக் கேட்டுவிட்டு, கடைத் தெருவிற்கு சென்று, கடிகாரக் கடையில், ‘இந்த கடிகாரத்திற்கான விலையாக எவ்வளவு தருவீர்கள்?’ என்று கேட்டு விட்டு தந்தையிடம் வந்தான்.
‘தந்தையே! இந்த கைக்கடிகாரம் மிகவும் பழையதாக இருப்பதால் இதற்கு 20 ரூபாய்களுக்கு மேல் தரமுடியாது என்று கூறிவிட்டார்கள்’ என்றான்.

watch

தந்தை முகமலர்ச்சியுடன் மகனைப் பார்த்து, கொஞ்சம் தள்ளி இருக்கும் பாரம்பரியமான புராதன பொருட்களை விற்கும் கடைக்குச் சென்று இதைக் காட்டிவிட்டு விலையை கேட்டு வா’ என்றார்.
புராதன பொருட்களை விற்கும் கடையில் இப்போது கடைக்காரர் மிகவும் மலர்ச்சியுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இதற்கு  5000 ரூபாய்கள் வரையில் தருகிறேன். வேறு யாரிடமும் இதை விற்க வேண்டாம் என்றார் கடைக்காரர்.
மகனும் நடந்த விஷயங்களை அப்படியே தந்தையிடம் வந்து கூறினான். 
தந்தை, அந்த விலையிலும் திருப்தியடையாமல், மகனிடம் இப்போது நீ அருகிலிருக்கும் மியூசிஸத்தின் நூதனசாலைக்குச் சென்று இதன் சரியான விலையை கேட்டுப் பார் என்றார். மகனுக்கு இப்போது ஆர்வம் அதிகமாகிவிட்டது. 5000 ரூபாய்க்கும் மேலாகவா இந்த பழைய கைக்கடிகாரத்தை வாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று எண்ணியபடியே நூதனசாலைக்குச் சென்று இதன் விலையைக் கேட்டான்.

father and son

அவர்கள் அந்த கைக்கடிகாரத்தை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து பரிசோதித்து விட்டு, எங்களால் இந்த கைக்கடிகாரத்தில் ஒரு லட்சம் ரூபாய்கள் வரையில் தர முடியும் என்றனர்.
மகன் மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு ஓடோடி வந்து தந்தையிடம் நூதன சாலையில் சொன்ன விலையை சொன்னான்.
இப்பொழுது தந்தையின் முகத்தில் முழு திருப்தி தெரிந்தது. 
மகனைப் பார்த்து, ‘மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்தி விட்டு, யாருமே உன்னை  மதிக்கவில்லை என்று கோபப்படுவதில் எப்பொழுதுமே ஒரு அர்த்தமும் இல்லை. இதைப் புரிந்துக் கொண்டால் உன் எதிர்கால வாழ்க்கை என்றுமே வசந்தம் தான்’ என்றார்.

உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்.உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே.இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.