எச்.ஐ.வி ரத்தம்… பெண்ணுக்கும், கணவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

எச்.ஐ.வி ரத்தம்… பெண்ணுக்கும், கணவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

மதுரை: எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. ஆனால் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழக மக்களுமே அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞரும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்ணை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்த ஊரிலேயே அவருக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.