எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை: சுகாதாரத்துறை செயலர் உறுதி

 

எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை: சுகாதாரத்துறை செயலர் உறுதி

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் தவறினால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்: சிவகாசி அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் தவறினால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, அருகில் உள்ள ஒரு ரத்த வங்கியில் இளைஞர் ஒருவர் தானமாக கொடுத்த ரத்தத்தை, பரிசோதித்துப் பார்க்காமல் கர்ப்பிணி பெண்ணின் உடலில் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றியுள்ளனர். ஆனால், தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு வந்திருந்தார். அங்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரனுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல், அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.