எங்க ஊரு வங்கியில பணத்தை போட்ட இந்தியர்களின் பட்டியலை இந்தியாவிடம் கொடுத்து விட்டோம்- சுவிஸ் அரசு தகவல்

 

எங்க ஊரு வங்கியில பணத்தை போட்ட இந்தியர்களின் பட்டியலை இந்தியாவிடம் கொடுத்து விட்டோம்- சுவிஸ் அரசு தகவல்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து இருந்த அனைத்து இந்தியர்களின் பட்டியலை இந்திய அரசு கடந்த மாதம் பெற்றுவிட்டதாக சுவிஸ் அரசு தெரிவித்தது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வங்கிகளில் இந்திய பண முதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்கும் நோக்கில் பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. அதுபோல் 2016 நவம்பரில் சுவிட்சர்லாந்து அரசுடன் தகவல்கள் பரிமாறி கொள்ளும் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. 

சுவிஸ் வங்கிகள்

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் வரி தொடர்பான தகவல்களை தன்னிச்சையாக பரிமாற்றம் செய்து கொள்ளும். மேலும், 2020 செப்டம்பர் முதல் தங்கள் நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் கணக்குகள் மற்றும் முதலீடு  குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு அளிக்க வேண்டும். அதன்படி, கடந்த 2018ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்து இருந்த இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை  இந்தியாவிடம் அந்நாடு அளித்தது.

கருப்பு பண முதலைகள்

தற்போது இதனை சுவிஸ் அரசு உறுதி செய்துள்ளது. இந்தியா உள்பட 75 நாடுகளுடன் வங்கி தகவல்களை பரிமாறி கொள்ளும் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 31 லட்சம் நிதி கணக்கு விவரங்களை மற்ற நாடுகளுக்கு அளித்துள்ளதாகவும், அதேபோல் மற்ற நாடுகளிடமிருந்து 24 லட்சம் நிதி கணக்கு விவரங்களை பெற்றுள்ளதாகவும் சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.