எங்களிடம் எந்த சலசலப்பும் இல்லை: மு.க.ஸ்டாலின் அதிரடி

 

எங்களிடம் எந்த சலசலப்பும் இல்லை: மு.க.ஸ்டாலின் அதிரடி

எங்கள் அணியில் எந்த சலசலப்பும் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: எங்கள் அணியில் எந்த சலசலப்பும் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் அதன் தோழமைக்கட்சிகள் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலய வளாகத்தில் 16-ந் தேதி நடைபெற இருக்கிறது. என்னுடைய தலைமையில், பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில், சோனியாகாந்தி திறந்து வைக்க இருக்கிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்க இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ-வில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 

கஜா நிவாரண பணிகளை முதல்-அமைச்சர் எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு ‘டீ’ கடைகளில் ‘டீ’ குடிப்பது ஊரை ஏமாற்றுவதற்கு நடத்தும் நாடகம். அடிப்படையான நிவாரண பணிகளில் இந்த அரசு முழுமையாக இன்னும் ஈடுபடவில்லை என்பது தான் எங்களுடைய ஒட்டுமொத்த குற்றச்சாட்டு. . கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து போராடி வருகிறார்கள்.

அங்கீகரிக்கப்படாத சின்னம் இல்லாத கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென திமுக தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டதாக  ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடிய சலசலப்புதானே தவிர, எந்த சலசலப்பும் எங்களுடைய அணியில் இருக்கக்கூடியவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரியார் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா? என்று கூறிய எச்.ராஜாவின் தரங்கெட்ட பேச்சுக்கெல்லாம் நான் தரம் தாழ்ந்து பதில் சொல்ல தயாராக இல்லை என்றார்.