ஊரடங்கு புதிய கட்டுப்பாடு: வண்ணங்களை வைத்து அலேக்காக வாகனங்களை தூக்கும் சேலம் போலீஸ்!

 

ஊரடங்கு புதிய கட்டுப்பாடு: வண்ணங்களை வைத்து அலேக்காக வாகனங்களை தூக்கும் சேலம் போலீஸ்!

தமிழகத்தில் தற்போது காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பொதுவெளியில் வாகன ஓட்டிகள் தேவையின்றி நடமாடுவதைத் தவிர்க்க, சேலம் மாநகர காவல்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  கொரோனா தொற்றால் 199 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  அதேபோல் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம் தமிழகத்தில் தற்போது காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 


இருப்பினும் பலர் ஊரடங்கை அலட்சியம் செய்யும் விதமாக இன்னும் கூட வாகனங்களில் சுற்றி திரிந்து வருகிறார்கள்.  இதனால் சேலம் மாநகர காவல்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 
அதாவது காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கியத் தேவைக்காக வாகனங்களில் வருவோர், இனி வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே வெளியே வர முடியும். அதேநேரம், 5 நாள்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ளும்படியும் மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறார்கள். 

அதேபோல்  ஒருவர் எத்தனை முறை வாகனங்களில் பொதுவெளியில் சுற்றுகிறார் என்பதை  கண்டறிய வாகனங்களின் பதிவெண் பலகையில் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு நிறத்தினாலான வண்ணத்தை காவல்துறையினர் பூசுகின்றனர். அதாவது , ஒருவர் முதல் முறையாக வெள்ளிக்கிழமையன்று வாகனத்தில் வருகிறார் எனில் அவருடைய பதிவெண் பலகையில் சிவப்பு வண்ணத்தில் ஒரு கோடு போடப்படும்.
அவர் மறுபடியும் திங்கள் கிழமையன்று இரண்டாவது முறையாகப் பொதுவெளியில் வாகனங்களை எடுத்துக்கொண்டு வர அனுமதிக்கப்படுவர். 

 

 

சனிக்கிழமையன்று வரும் வாகனங்களில் மஞ்சள் வண்ணத்தில் கோடு போடப்படும். அவர் இரண்டாவது முறையாகச் செவ்வாய்க்கிழமை மட்டுமே வெளியில் வாகனங்களில் நடமாடலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் வாகனங்களின் பதிவெண் பலகையில் பச்சை வண்ணத்தில் கோடு போடப்படும். அவர்கள் இரண்டாவது முறை புதன்கிழமை அனுமதிக்கப்படுவர். இந்த மூன்று வண்ணங்களும் பூசப்படாத வாகனங்கள் மட்டும் வியாழக்கிழமை அனுமதிக்கப்படும். அன்று வரும் வாகனங்களில் பச்சை வண்ணத்தில் கோடு போடப்படும்.அந்த வாகனங்கள் இரண்டாவது முறையாக ஞாயிறு அல்லது புதன்கிழமைகளில் அனுமதிக்கப்படும். 

மற்ற நாட்களில் வெளியில் சுற்றி திரிந்தால் அவர்கள் மீது தசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என சேலம் மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அதே சமயம் மருத்துவமனை உள்ளிட்ட தவிர்க்க இயலாத தேவைகளுக்காக வாகனங்களில் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.