உழைப்பு வீண் போகாது…. இஸ்ரோவுக்கு ராகுல் நம்பிக்கை

 

உழைப்பு வீண் போகாது…. இஸ்ரோவுக்கு ராகுல் நம்பிக்கை

உழைப்பு வீண் போகாது என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே தரையிறங்கி சாதனை படைத்துள்ளன. இந்த சாதனையை படைக்கும் நோக்கில் சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. மொத்தமே ஆயிரம் கோடிக்கும் குறைவான செலவில் சந்திரயான் 2வை உருவாக்கினர். கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டமிட்டப்படி இன்று அதிகாலையில் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் லேண்டர் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சந்திரயான் 2 திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

இஸ்ரோ குழு

சந்திரயான் 2க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால் இஸ்ரோ குழுவினர் கடும் சோகத்தில் உள்ளனர். அவர்களுக்கு காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் அளிக்கும் விதமாக டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். நிலவு மிஷன் சந்திரயான் 2க்காக வியத்தக்க வகையில் உழைத்த இஸ்ரோ குழுவுக்கு எனது பாராட்டுக்கள். உங்களது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்.

உங்கள் உழைப்பு வீண் போகாது. இன்னும் பல பாதைகளை உடைக்கும் மற்றும் லட்சிய இந்திய விண்வெளி பயணங்களுக்கு இது அடித்தளம் அமைத்துள்ளது என ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார். 

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியும் இஸ்ரோவுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் டிவிட் செய்துள்ளது. இஸ்ரோவின் குழுவுடன் தேசமே நிற்கிறது. பதற்றமான இந்த நேரத்தில் பொறுமையாக இருப்போம். உங்களது கடின உழைப்பு மற்றும் பொறுப்பு தேசத்தை பெருமை படுத்தியுள்ளது. ஜெய் ஹிந்த் என்று காங்கிரஸ் கட்சி டிவிட் செய்துள்ளது.