உலக கோப்பை ஹாக்கி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் ‘டிரா’

 

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் ‘டிரா’

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா- பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

புவனேஸ்வர்: உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா- பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடியும் வரை இந்திய அணி கோல் போடாததால் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் பிற்பாதியில் இந்திய வீரர்களின் கை சற்று ஓங்கியது. 39-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை இந்தியாவின் ஹர்மன்பிரீத்சிங் எளிதில் கோலாக்கினார்.

தொடர்ந்து, சிம்ரன் ஜித் சிங் 47வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால், 56-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சிமோன் கோக்னர்ட் கோல் போட்டு பதிலடி கொடுத்தார். இதனால், ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

‘சி’ பிரிவில் இவ்விரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இந்திய அணி தனது கடைசி லீக்கில் கனடாவை வருகிற 8-ம் தேதி சந்திக்கிறது. இதில் இந்திய அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக கால் இறுதி சுற்றை எட்ட முடியும்.