உலகத்தில் மகிழ்ச்சியானவர் யார்?

 

உலகத்தில் மகிழ்ச்சியானவர் யார்?

என்னிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால், மகிழ்ச்சியும் நிம்மதியும் மட்டுமே என்னிடத்தில் தங்குவதில்லை. எவ்வளவு பணம் செலவானாலும் சரி… என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள்”  என்று கேட்டாள்.

ஒரு ஊரில் பெரிய பணக்காரப் பெண்மணி ஒருவர் வாழ்ந்து வந்தார். இளம் வயது, பணக்காரத்திமிர், பட்டாடை என்று மிக ஆரம்பரமாக வாழ்க்கையை நடத்தி வருகிற பெண்மணி அவர். ஒரு நாள், அந்த ஊரில் இருந்த மனோதத்துவ மருத்துவரைக் காணச் சென்றிருந்தாள். 

அவரிடம், “என் வாழ்கை எப்பொழுதும் ஒரே சூன்யமாக இருப்பதைப் போல உணர்கிறேன். என்னிடம் இல்லாத பணமோ, வசதியோ கிடையாது. இந்த உலகில் எது வேண்டுமானாலும் அதிகம் சிரமப்படாமலே எனக்கு நான் ஆசைப்பட்டதெல்லாமே கிடைத்து விடும். ஆனாலும், எவ்வளவு இருந்தாலும், என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று ஒரு வெற்றிடத்தை நிரப்புவதைப் போல உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல், வாழ்க்கையில் எதை நோக்கிச் செல்கிறேன் என்கிற இலக்கே இல்லாமல் தினந்தோறும் வாழ்க்கை என்னை இழுத்துச் செல்வதைப் போல உணர்கிறேன். என்னிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால், மகிழ்ச்சியும் நிம்மதியும் மட்டுமே என்னிடத்தில் தங்குவதில்லை. எவ்வளவு பணம் செலவானாலும் சரி… என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள்”  என்று கேட்டாள்.

women

இப்போ அந்த மருத்துவர், வந்திருந்தப் பெண்மணியை விநோதமாகப் பார்த்தார். அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அந்த பெண்மணியின் பேச்சிலேயே மருத்துவர் புரிந்துக் கொண்டார்.
அந்த மருத்துவமனையை, பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை வரச் சொல்லிவிட்டு, பணக்கார பெண்மணியிடம், ” நான் இப்பொழுது எங்கள் மருத்துவமனையின் பணி பெண் வந்தவுடன், ‘நீ எப்படி மகிழ்ச்சியை வரவழைக்கிறாய்?’ என்று கேட்கிறேன். அவள் பதில் சொல்லி முடிக்கும் முன்னர் நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் ” என்றார்.

பவ்யத்துடன் வந்து நின்ற பணி பெண்ணை நோக்கி மருத்துவர், ‘நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாய்? இந்த இருக்கையில் அமர்ந்துச் சொல்’ என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..

doctor

” இப்பொழுது தான் சமீபத்தில் என் கணவர் இறந்துப் போனார். அவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை, எதுவும் இல்லை. என்னால் உறங்கவும் இயலவில்லை. சாப்பிட முடியவில்ல. யாரிடமும் சிரித்துப் பேச முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன்.  

இப்படி என்னுடைய தினந்தோறுமான வாழ்க்கை நரக வேதனையில் கடந்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்து வந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக் கொண்டு இருந்தது. எனக்கு பூனையை பார்க்கப் பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டின் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது.

கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன். நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ‘ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் என்னை சந்தோசமாக வைத்திருக்கிறது எனில், ஏன் இதை பலருக்குச் செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது’ என யோசித்தேன். அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் பக்கத்து வீட்டு தாத்தாவிற்கு, குடிப்பதற்கு வீட்டிலேயே கஞ்சி தயாரித்துக் கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னுடைய அன்பான உபசரிப்பால் அவர் நோயிலிருந்து மீண்டு, உற்சாகமாகவும், விரைவாகவும் குணமடைய ஆரம்பித்தார். அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவிகள் செய்து, அவர்கள் மகிழ அந்த மகிழ்ச்சியில் நானும் பெரு மகிழ்வுற்றேன். இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு. அது மற்றவர்களுக்கு கொடுப்பதில் தான் நம்மிடம் வருகிறது. நாம் மட்டுமே எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருந்து விட முடியாது. அடுத்தவரை மகிழ்ச்சியாய் வைத்திருந்தால், நம்மையும் நமது புற உறவுகள் மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் என்பதைக் கண்டு கொண்டேன்” என்று சொல்லி முடித்தாள்.

women

இதை கேட்ட அந்த பணக்கார பெண், சத்தமாகக் குரலெடுத்து ஓலமிட்டு அழத் துவங்கிவிட்டாள். ஆமாம் மகிழ்ச்சியை எப்பொழுதும் பணத்தால் வாங்க முடியாது. மகிழ்ச்சியை நல்ல குணத்தால் தான் வாங்க முடியும். 

வாழ்க்கையின் அழகு என்பது  நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதில் இல்லை. நம்மால் பிறர் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது.
மகிழ்ச்சி என்பதுபோய் சேரும் இடம் அல்ல. அது ஒரு பயணம். மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம்