உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு சொன்ன போஸ்கோ நீதிமன்றம்….

 

உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு சொன்ன போஸ்கோ நீதிமன்றம்….

உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், போஸ்கோ நீதிமன்றம் 9 வேலை நாட்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.

உத்தர பிரதேசம் அவுரையா போலீஸ் சூப்பிரண்டு சுனிடி இது குறித்து கூறியதாவது: அவுரையா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ராஜா (பெயர் மாற்றம்) கடந்த 1ம் தேதியன்று பக்கத்து வீட்டு 4 வயது சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார். தனக்கு என்ன நடந்தது என்று கூட அறியாத பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்த அவளது பெற்றோர் அது குறித்து விசாரித்து உள்ளனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

சிறுமி பக்கத்து வீட்டு வாலிபர் செய்ததை கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பகுதி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் தங்களது 4 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜா மீது புகார் கொடுத்தனர். போஸ்கோ சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் ராஜாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. புகாரை பதிவு செய்த போலீசார் அதற்கு அடுத்த நாளே ராஜா கைது செய்தனர். 

சிறுமி பாலியல் பலாத்காரம்

ஆதாரங்கள் திரட்டுதல் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகளை தயார் செய்த பிறகு கடந்த 18ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. போஸ்கோ நீதிமன்றம் அதனை 20ம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி ராஜேஸ் சவுகான், தொடர்ந்து 9 வேலை நாட்களில் விசாரணையை முடித்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.