உதவி ஆய்வாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை; உறவினர்கள் ஆர்ப்பாட்டம்: நடந்தது என்ன?

 

உதவி ஆய்வாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை; உறவினர்கள் ஆர்ப்பாட்டம்: நடந்தது என்ன?

சேலையூர் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை: சேலையூர் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலயூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவின் உதவி ஆய்வாளராக இருப்பவர், ஜெய்கணேஷ் (34). இவர் தனது 27 வயது மனைவி பிரவீனாவுடன் வாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, 9 வயதில் மகன் இருக்கிறார். 

இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவதும், பின்னர் சரியாவதுமாக இருந்துள்ளது. அந்த வகையில், நேற்றும் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஜெய்கணேஷ், சற்று நேரம் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 

அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த தன் மனைவியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு திரண்ட பிரவீனாவின் உறவினர்கள், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.