உதவியற்ற முதல்வர்! கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்.பி…

 

உதவியற்ற முதல்வர்! கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் எம்.பி…

கூலிப்படையினரால் தாக்கப்பட்ட ஜே.என்.யு. மாணவர்களை சந்திக்காத அரவிந்த் கெஜ்ரிவாலை ‘உதவியற்ற முதல்வர்’ என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் செய்தி கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமை குற்றச்சாட்டியதுடன், விமர்சனமும் செய்தார். சசி தரூர் கூறியதாவது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நிலையான முடிவை எடுக்கவில்லை.

ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை பொறுத்தவரை ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரு தரப்பு மக்கள் பக்கமும் நிற்க கெஜ்ரிவால் விரும்புகிறார். அந்த சட்டம் தொடர்பாக அவர் நிலையான நிலைப்பாடை எடுக்கவில்லை. பிரச்சனைகள் குறித்து கெஜ்ரிவால் பேசவில்லை என்றால் மக்கள் எதன் அடிப்படையில் அவருக்கு வாக்களிக்க வேண்டும். அவர் (கெஜ்ரிவால்) யாருடைய உத்தரவுகளை பெறுகிறார் என எனக்கு தெரியவில்லை. உங்க மாணவர்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசக்கூடாது, காயமடைந்த மாணவர்களை சந்திக்க கூடாது, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெளிவான நிலைப்பாடு எடுக்கக்கூடாது என யார் உங்களிடம் சொன்னது? நீங்கள்தான் முதல்வர் உங்களுக்கு யாரும் உத்தரவிட முடியாது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் முன்பு டிவிட்டரில், மறைந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை உதவியற்ற முதல்வர் என குறிப்பிட்டு இருந்தார். இப்பம் அவர் தனது அந்த டிவிட்டை திரும்ப படிக்க வேண்டும். தங்களது குழந்தைகள் லத்திகளை எதிர்கொள்ளும்போது, அவர்களை சந்திக்காத உதவியற்ற முதல்வரை பெற்றோர்கள் விரும்புவார்களா?. இவ்வாறு அவர் பேசினார்.