உதவிக்காக ஏங்கும் வோடாபோன் ஐடியா, ஏர்டெல்….. நிதியமைச்சரை சந்தித்த மிட்டல் மற்றும் பிர்லா

 

உதவிக்காக ஏங்கும் வோடாபோன் ஐடியா, ஏர்டெல்….. நிதியமைச்சரை சந்தித்த மிட்டல் மற்றும் பிர்லா

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் நிவாரணம் கோரி வோடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளனர்.

தொலைத்தொடர்பு சேவை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி பெற்ற நிறுவனங்கள் தங்களது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் (ஏ.ஜி.ஆர்.) குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு அனுமதி கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் வாடகை, குறிப்பிட்ட சொத்துக்கள் விற்பனையில் கிடைக்கும் லாபம் மற்றும் ஈவுத்தொகை போன்ற தொலைபேசி அல்லாத வருமானங்களும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் சேர்க்கப்பட்டது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனுமதி கட்டணமாக பெரும் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

சுனில் மிட்டல்

இதனை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் சென்றன. ஆனால் உச்ச நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் நிலுவை தொகையை செலுத்த வேண்டும் இல்லையென்றால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

நிர்மலா சீதாராமன்

ஏற்கனவே கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா ஆகியோர் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். அப்போது மிகப்பெரிய ஏ.ஜி.ஆர். நிலுவை தொகையால் தற்போது தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து நிறுவனத்தை நடத்த அரசு ஏதாவது நிவாரணம் அளிக்க வேண்டும் நிர்மலா சீதாராமனிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.