உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள…… காஷ்மீரில் 25 வெளிநாட்டு தூதர்கள்….. இன்று இந்திய ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு

 

உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள…… காஷ்மீரில் 25 வெளிநாட்டு தூதர்கள்….. இன்று இந்திய ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு

காஷ்மீரின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளுவதற்காக, ஐரோப்பா உள்பட 25 வெளிநாட்டு தூதர்கள் அடங்கிய 2வது குழு இரண்டு நாள் பயணமாக நேற்று அங்கு சென்றது. இன்று அவர்களிடம் காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளி்ப்பர்.

2019 ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. அங்கு இயல்பு நிலை திரும்பியவுடன் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. மேலும் காஷ்மீரின் உண்மை நிலவரத்தை வந்து தெரிந்து கொள்ளும்படி உலக நாடுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 

வெளிநாட்டு தூதர்கள்

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், உண்மை நிலவரத்தை அறியவும் 2 நாள் பயணமாக 15 நாடுகளை சேர்ந்த தூதர்கள் கடந்த மாதம் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்கா, வளைகுடா பகுதி மற்றும் இதர ஆசிய நாடுகளை சேர்ந்த 25 வெளிநாட்டு தூதர்கள் அடங்கிய 2வது குழு, நேற்று காஷ்மீர் சென்றனர். இரண்டு நாள் பயணமாக அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

வெளிநாட்டு தூதர்கள்

முதல் நாளான நேற்று அவர்கள் ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி சென்டர், ஜஹாங்கிர் சவுக், ராவால்புரா மற்றும் ராஜ்பாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசினர். இன்று இந்திய ராணுவ அதிகாரிகளை அவர்கள் சந்திக்கின்றனர். அப்போது காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அங்கு தீவிரவாத செயல்களில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்தும் ராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.