உண்மையைப் பேசுங்கள் விஜய பாஸ்கர்… அது தான் அந்த பதவிக்கு மரியாதை! முன்னாள் எம்.எல்.ஏ-வின் கடிதம்!

 

உண்மையைப் பேசுங்கள் விஜய பாஸ்கர்… அது தான் அந்த பதவிக்கு மரியாதை!  முன்னாள் எம்.எல்.ஏ-வின் கடிதம்!

கொரோனா பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை உண்மையை பேசவே இல்லை என்று, அவருடைய பேட்டியை அடிப்படையாக வைத்து தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். பதறவைக்கும் கேள்விகள் பல அதில் எழுப்பப்பட்டுள்ளன.

சென்னை: கொரோனா பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை உண்மையை பேசவே இல்லை என்று, அவருடைய பேட்டியை அடிப்படையாக வைத்து தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். பதறவைக்கும் கேள்விகள் பல அதில் எழுப்பப்பட்டுள்ளன.

குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் தி.மு.க பிரமுகருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.03.2020) மதியம் தொலைக்காட்சிக்கு ஆன்லைனில் பேட்டி கொடுத்தார் “ஆக்டிவ்” மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே மக்கள் நலன் பேணும் அமைச்சர் இவர் ஒருவர் தான் என ஒரு கூட்டமே கொண்டாடுகிறது. ஆனால் இந்தப் பேட்டி தான் “உண்மையை” விளம்பியது, இல்லை இல்லை அவரே விளம்பினார்.

ttn

நிருபர் கேட்டார், “பலரும் வாழ்த்துகிறார்கள், மிக சிலர் விமர்சிக்கிறார்கள். உண்மை எண்ணிக்கையை சொல்லவில்லை என சொல்கிறார்கள்”. விஜயபாஸ்கர் அழகாக சமாளித்தார். ” அது குறித்து டாக்டர் சொல்வார்”, என்று ஒரு டாக்டரை பேச வைத்தார்.

இது வரை வெளி நாட்டிலிருந்து வந்தவர்களை தான் சோதனை செய்ய மத்திய அரசு அறிவித்திருந்தது. இனி தான் உள்ளூரில் இருப்பவர்களையும் சோதனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது”, இது அந்த டாக்டர் சொல்லியது.

இதையே பிறகு மழுப்பி, மழுப்பி ” டாக்டர்” விஜயபாஸ்கரும் சமாளித்தார்.

விஷயம் இது தான்…

தமிழ்நாட்டில் வசிப்பவர்களை இது வரை சோதனை செய்யவில்லை. அதனால் தமிழ்நாட்டில் வசிப்போரிடம் கொரோனா பரவி இருக்கிறதா, இல்லையா என்பதே விஜயபாஸ்கருக்கு தெரியாது என்பது தான் உண்மை.

வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் வந்தவர்களை சோதனை செய்ததாக சொல்கிறார்களே, அதுவாவது உண்மையா? அதுவும் உண்மை இல்லை.

யார் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று “தானாக” மருத்துவமனைக்கு வந்தார்களோ, அவர்களுக்கு மாத்திரமே சோதனை செய்யப்பட்டது.

டெல்லியில் இருந்து ரயிலில் வந்த இளைஞர், உடல் நிலை சரி இல்லாமல், மூச்சடைத்ததால் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அதனால் தான் அவருக்கு நோய் இருப்பது உறுதியானது. அவரோடு பழகிய 150க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கரே சொல்லி உள்ளார்.

அந்த இளைஞர் உடல்நிலை சரியில்லை என்று டெல்லி திரும்பி இருந்தால், அவர் கதை யாருக்கும் தெரிந்திருக்காது. அவரோடு பழகிய 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். அதில் யாருக்காவது கொரோனா வந்து, மருத்துவமனைக்கு போயிருந்தாலும் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டிருக்காது. காரணம், வெளி பயண ஹிஸ்டரி இல்லாதவர்களுக்கு சோதனை செய்யப்பட மாட்டாது. யாராவது தவறி உயிரிழக்கும் சூழல் வந்திருந்தாலும், காரணம் வேறு சொல்லப்பட்டிருக்கும், மர்மக் காய்ச்சல் போல.

அங்கு கொரோனா, இங்கு கொரோனா, அங்கு இறப்பு, இங்கு இறப்பு என செய்தி உலவுகிறது. அதை நாம் வலியுறுத்தப் போவதில்லை. அரசு சொல்லும் வரை காத்திருப்போம்.

ஆனால் அதே சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் ஹேண்டிலில், அமைச்சர் தகவலுக்கு ஒருவர் போட்டிருக்கும் பதில் உறுத்துகிறது. 150 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 80% பாசிட்டிவ் என்றும் தகவல். ஒரு நுரையீரல் சிறப்பு மருத்துவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் செய்தி உலவுகிறது.

அது குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், வாய் திறக்க பயப்படுகிறார்கள். அமைச்சர் கருத்துக்கு மறுகருத்து தெரிவித்தால், அது வதந்தி என முத்திரைக் குத்தப்படும் என்பது தான் பயத்திற்கு காரணம். இப்படி தான், சீனாவில் முதலில் வாய் திறந்த மருத்துவர் வென்லியாங் மிரட்டப்பட்டார். உயிரையே இழந்து விட்டார், கொரோனாவால்.

அதே சமயம், ஒரு கருத்தை சொன்னார்கள் மருத்துவர்கள். N95 முகக்கவசம் கூட தரப்படவில்லை. அவர்களுக்கு தேவையான முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடையை முதலில் முதலில் ஏற்பாடு செய்யுங்கள். பெரிய மருத்துவமனைகளில், பலர் வந்து செல்கிறார்கள். யாரும் சோதிக்கப்படுவதில்லை. வருபவர் கொரோனாவை அள்ளிக் கொடுத்தால், யாருக்கு தெரியும்? பாதிக்கப் போவது மருத்துவர்கள் தான். அவர்கள் பாதிக்கப்பட்டால் மக்களை யார் காப்பாற்றுவது?

இது ஒரு புறம். இன்னொரு புறம் விமானங்கள் தான் கொரோனாவை பெருமளவில் கொண்டு வந்து சேர்த்தன. விமான நிலையங்களில் ஒழுங்காக சோதனை நடத்தி இருந்தாலே பிரச்சினை இவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்காது. ஆனால் அங்கே போன வாரம் வரை கேட்க ஆளில்லை.

இப்போது ஒரு கேள்வி வரும். தினம் விஜயபாஸ்கர் தொலைக்காட்சியில் தோன்றி சொன்னாரே, சோதனை நடைபெறுகிறது என்று. அதிலும் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டதாக சொன்னாரே. அது உண்மை இல்லையா ?

உண்மை தான். சோதனை செய்யப்பட்டது தான். திருவரங்கம் கோவிலில் நுழைபவர்களை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப நிலையை அளந்தார்களே, அதே போல் செய்யப்பட்ட சோதனை தான் இதுவும்.

அப்போ எதுவுமே சரியாக நடக்கவில்லையா என்று கேட்பீர்கள்.

கொரோனா இருப்பதாக அறியப்பட்ட முதல் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குறை இல்லை.

அதை சிறந்த பி.ஆர்.ஓக்கள் உதவியோடு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி கொடுத்தார். ஊடகங்கள் அதை வெளிச்சம் போட்டுக் காட்டின. இதுவரை எல்லாம் சிறப்பாக நடந்தது.

அதே போல் விஜயபாஸ்கர் குடும்பத்தோடு நின்று கைத்தட்டி, மோடி பேச்சை நிறைவேற்றினார்.

இனி தமிழ்நாட்டில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் சோதனைக்கு வரும் போது தான், உண்மை கணக்கு வெளி வரும். ஆனால் அந்த நேரம் விஜயபாஸ்கருக்கு கைதட்டும் நேரமாக இருக்காது.

இது இயற்கை பேரிடர். நோய் வந்ததற்கு யாரும் அரசாங்கத்தை காரணம் சொல்லப் போவதில்லை. ஆனால் பரவலை அரசே தடுக்க வேண்டும். உண்மையை சொன்னால் மக்கள் எச்சரிக்கை அடைவார்கள். அதை விடுத்து மறைத்து பேசுவதில் அர்த்தம் இல்லை.

10,000 பேர் தனிமைப்படுத்த பட்டிருப்பதாக துறை செயலாளர் பீலா ட்விட்டுகிறார். மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவர்களை தனிமைப்படுத்தி கொள்ள சொல்லி கடிதம் எழுதுகிறார். உண்மை ஏதோ ஒரு பக்கம் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது.

வெறும் விஜயபாஸ்கர் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்விஜயபாஸ்கர் அப்படி பேசக் கூடாது.

# உண்மையை பேசுங்கள், அது தான் அந்த பதவிக்கு மரியாதை. மக்களுக்கு பாதுகாப்பு !” என்று கூறியுள்ளார்.