உச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம்… ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது…. அடம் பிடிக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்…

 

உச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம்… ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது…. அடம் பிடிக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்…

உச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம் ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது என மத்தியஸ்தர்களிடம் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் உள்ளவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் சாலையில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாத்னா ராமசந்திரன்  ஆகியோர் அடங்கிய மத்தியஸ்த குழுவை நியமனம் செய்தது. மத்தியஸ்த உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமையன்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை தொடங்கினர். ஆனால் அன்று எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து தொடர்ந்து 2வது நாளாக நேற்று மத்தியஸ்த குழு உறுப்பினர்கள் மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாத்னா ராமசந்திரன் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர். அப்போது மத்தியஸ்தர்கள் போராட்டக்காரர்களிடம் கூறியதாவது: டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் நீடிக்கும் ஆனால் இதனால் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். யாருக்கும் எந்தவித பிரச்சினையும் ஏற்படக் கூடாது. நாம் ஒருவருக்கொருவர் உதவுவதற்காக நாம் இந்த நாட்டில் வாழ்கிறோம் பிரச்சினை ஏற்படுத்துவதற்கு அல்ல. எதிர்ப்பு தொடர வேண்டும் ஆனால் மக்களுக்கு எந்தவித சிரமும் கொடுக்காத இடத்தில் போராட்டம் நடக்க வேண்டும். நொய்டாவில் உள்ள மக்கள் டி.என்.டி. அல்லது வேறு எங்காவது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், அதனால் யாருக்கும் நல்லது இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தையின் இடையே, யாருக்கெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என மத்தியஸ்தர்கள் போராட்டக்காரர்களிடம் கேட்டனர். அதற்கு போராட்டக்காரர்கள் அனைவரும் நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தனர். அப்படி என்றால் போராடும் இடத்தை மாற்றுமாறு மத்தியஸ்கர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அது நடக்காது என போராட்டக்காரர்கள் என தெரிவித்தனர். நேற்றும் எந்தவித தீர்வும் கிடைக்காததால் இன்றும் ஷாஹீன் போராட்டக்காரர்களை மத்தியஸ்தர்கள் சந்தித்து பேச உள்ளனர்.