உங்களால் எங்களுக்கு பெருமை! உங்களோடு நாங்கள் இருக்கிறோம்! இஸ்ரோ குழுவுக்கு மோடி ஆறுதல்…

 

உங்களால் எங்களுக்கு பெருமை! உங்களோடு நாங்கள் இருக்கிறோம்! இஸ்ரோ குழுவுக்கு மோடி ஆறுதல்…

சந்திரயான் 2 கடைசி நேரத்தில் பின்னடவை சந்தித்தால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். உங்களால் எங்களுக்கு பெருமை, உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என பிரதமர் மோடி அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில், மொத்தமே ரூ.940 கோடி செலவில் சந்திரயான் 2வை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 நிலவை அடைய 48 நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டு இருந்தது. 

இஸ்ரோ குழுவுடன் மோடி

இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டப்படி இன்று அதிகாலையில் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சரித்திரமிக்க சாதனை நிகழ்வை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்தார். அவர் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் காட்சியை பார்த்து கொண்டு இருந்தார்.

நிலவை அடைய 2.1 கி.மீ. தூரம் இருக்கும் வரை லேண்டர் சரியாக இறங்கியது. ஆனால் அதன்பின் பிரச்சனை ஏற்பட்டது. நிலவுக்கு 2 கி.மீட்டருக்கு முன்னதாக வேகம் குறைக்கப்பட்டு லேண்டர் நிலவில் மெதுவாக இறக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் லேண்டருடனான தொடர்பு துண்டானது. இதனால் சந்திரயான் 2க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாதனை நிகழும் என்ற எதிர்பார்த்த நேரத்தில்  சந்திரயான் 2க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது இஸ்ரோ குழுவுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது. மேலும், பல விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். 

இஸ்ரோ குழுவுடன் மோடி

சாதனை நிகழ்வை பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும், இஸ்ரோ குழுவிடம் ஆறுதல் அளிக்கும் விதமாக பேசினார். தைரியமாக மற்றும் கடினமாக தொடர்ந்து உழையுங்கள். உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். உங்களோடு நாங்கள் இருக்கிறோம். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் நிகழதான் செய்யும். அடுத்த முறை நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று இஸ்ரோ குழுவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேசினார்.