இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான சேதி! சமையல் கியாஸ் விலை 100 ரூபாய் குறைகிறது!

 

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான சேதி! சமையல் கியாஸ் விலை 100 ரூபாய் குறைகிறது!

இன்று முதல் சமையல் கியாஸ் விலை ரூ.100.50 குறையும். சர்வதேச சந்தையில் கியாஸ் விலை குறைந்ததே இதற்கு காரணம் என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.

நம் நாட்டில் தற்போது சமையல் கியாஸ் விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் முந்தைய மாதத்தின் சராசரி கியாஸின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் கியாஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

இந்தியன் ஆயில்

மத்திய அரசு ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 கியாஸ் சிலிண்டர்களை குடும்பங்களுக்கு மானிய விலையில் வழங்குகிறது. பயனாளிகள் முதலில் கியாஸ் சிலிண்டரை சந்தை விலைக்குதான் வாங்க வேண்டும். அதன் பிறகுதான் மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு நேரடியாக செலுத்லும். 12 சிலிண்டருக்கு மேல் ஒரு சிலிண்டர் வேண்டும் என்றாலும் அதன் பிறகு சந்தை விலைக்குதான் வாங்க முடியும். 

சமையல் கியாஸ்

விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுவதால் சமையல் கியாஸ் விலை தொடர்ந்து நிலையாக இருக்காது. கடந்த மாதம் கியாஸ் விலை 4 சதவீதம் அதிகரித்த நிலையில் இந்த மாதம் ரூ.100 குறைந்துள்ளது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கியாஸ் விலை குறைந்தது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் திங்கட்கிழமை (இன்று)  முதல் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.737.50லிருந்து ரூ.637ஆக குறைகிறது. மத்திய அரசு மானியமாக ரூ.142.65-ஐ பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும். இதன்படி பார்த்தால் பயனாளிகளின் கியாசுக்கான பயனுள்ள செலவினம் ரூ.494.50 என்ற அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் விலை 100 ரூபாய் குறைந்து இருப்பது நடுத்தர வர்த்தகத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.